Tuesday, 8 July 2008

எண்ணெய் வள ஆய்வு குறித்த ஒப்பந்தம் நாளை பாராளுமன்றத்தில்- ஏ.எச்.எம்.பௌசி

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்திய நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துக்கும், இந்திய நிறுவனத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்படவிருந்த ஒப்பந்தத்தை இரண்டு தினங்கள் ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தபோதும் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையென ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

இந்த ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரைகளையும் இணைத்துக் கொள்ளும் நோக்கிலேயே, ஒப்பந்தத்தை இரண்டு வாரகாலங்களின் பின்னர் கைச்சாத்திடுமாறு தாம் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து இரண்டு தினங்களின் பின்னரே இந்தக் கோரிக்கை தன்னிடம் விடுக்கப்பட்டதாகவும், ஆயினும், ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்தமையால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்றத்தில் பதிலளித்தார்.

இலங்கை மீது தமக்கும் அக்கறை இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதனைக் கருத்தில்கொண்டே இந்த ஒப்பந்தத்தைத் தயாரித்திருந்ததாகக் கூறினார். இந்திய நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்திய நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கும் எனவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மேலும் கூறினார்.

இதேவேளை, நாட்டைப் பற்றியோ, நாட்டின் பாதுகாப்பையோ கவனத்தில் கொள்ளாது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் கூறினார்.

இந்திய நிறுவனத்துக்கும், இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட முன்னர் அது தொடர்பாக ஆராய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், அதன்மூலம் மேலும் பல நன்மை தரக்கூடிய விடயங்களை உள்ளடக்கியிருக்க முடியுமெனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

எனினும், இந்த ஒப்பந்தத்தையும், இலங்கையின் எண்ணெய் வளத்தையும் சரியாகப் பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்த விமல் வீரவன்ச, எண்ணெய் வளத்தைப் பெற்றுக்கொள்வதற்காவே உலக நாடுகளில் பல எண்ணெய்வளம் மிகுந்த நாடுகளுடன் சண்டையிட்டு வருவதாகவும் கூறினார்.

No comments: