Monday, 21 July 2008

வெளிநாட்டுப் பணியாளர்கள் இலங்கை வருவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை- ஊடகம் தகவல்

அரசசார்பற்ற நிறுவனங்களுக்காக வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருக்கும் இலங்கை அரசாங்கம், உள்ளூரில் தகுதியற்றவர்கள் இல்லாத பட்சத்திலேயே வெளிநாட்டவர்களை இலங்கைக்கு வர அனுமதிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை அனுமதிப்பதற்கு முன்னர் உள்ளூரில் குறிப்பிட்ட வேலைக்குத் தகுதிவாய்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கம்,


அரசாங்க அதிபர்களுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய நெறிமுறைகளைப் பின்பற்றும் பட்சத்திலேயே வெளிநாட்டவர்களுக்கு வேலைசெய்வதற்கான விசா அனுமதி அரசாங்கத்தால் வழங்கப்படுமெனக் கூறப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா அனுமதி தொடர்பாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை புதிய நெறிமுறைகளை அறிவித்திருந்தது. இதற்கமைய அரசசார்பற்ற நிறுவனங்களின் வதிவிடப் பிரதிநிதிகளுக்கு கூடியது 3 வருடங்களுக்கே விசா அனுமதி வழங்கப்படும் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


வெளிவிவகார அமைச்சின் இந்தப் புதிய நெறிமுறைகள் உள்நாட்டு அமைச்சின் ஊடாக அனைத்து மாகாணங்களினதும் பிரதேசசபைத் தலைவர்களுக்கும், அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நெறிமுறைக்கு அமைய வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் தேவையற்ற அரசியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கே இந்த அனுமதி கோரப்படுவதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.


ஒரு அரசசார்பற்ற நிறுவனம் குறிப்பிட்ட இடத்தில் பணியாற்றுவதற்கு அந்த நிறுவனத்தின் தேவை தொடர்பாக அந்தப் பகுதி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் அல்லது பிரதேச செயலாளர் சிபாரிசு செய்யவேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

No comments: