கிழக்கு மாகாணத்தில் சிங்களக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனும் கூற்றை மறுத்துள்ள ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, கிழக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வெளியார் எவரும் மீள்குடியமர்த்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் வாகரைப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் நிகழ்ந்துள்ளமை குறித்து தான் அறிந்து கொள்ள விரும்புவதாக வெளிநாட்டுப் பிரதிநிதி ஒருவர் தன்னிடம் வினவியதற்கு தான் மேற்கண்டவாறே பதிலளித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் முன்னெப்போதுமில்லாதவாறு, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், கிழக்கில் அரசாங்கம் பாரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டதன் பின்னர் அது குறித்து சர்வதேச சமூகத்திற்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சமூகத்தின் உதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயராகவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ராஜபக்ஷ அரசாங்கம் ஒரு போதும் அனுசரணையாளர்களை ஏமாற்றாது எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து கிழக்கில் மாகாண சபைத் தேர்தலும் நடாத்தப்பட்டமையானது, இறுதித் தீர்வு குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்துவந்த குழுவுடன், அரசாங்கம் அரசியல் கூட்டணி அமைத்தமை துணிச்சலான செயல் எனத் தெரிவித்துள்ள அவர்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றிருப்பதன் மூலம், கிழக்கு மாகாணத்தில் இராணுவ ரீதியான நிர்வாகம் ஒன்று அரசாங்கத்திற்கு அவசியமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment