நிபந்தனைகளை ஏற்று விடுதலைப் புலிகள் பேச்சுக்குவந்தாலும், வடக்கை விடுவிக்கும் இராணுவ நடவடிக்கை தொடரும் என இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகளை ஏற்று விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் வரமாட்டார்கள், அவ்வாறு வந்தாலும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேசமயம்,
வடக்கை விடுவிக்கும் தமது இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரசாங்க ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கூறினார்.
சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் மாற்றமொன்று தேவை எனவும், தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி அனைத்து சமூகத்தினருக்கும் இந்த அரசியல் தீர்வு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“சில தமிழ் அரசியல் தலைவர்கள் குறிப்பாக சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மைக்குப் புறம்பானவற்றையே இங்கு கூறுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பாரிய அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன, எனினும், அதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களையே அவர்கள் கூறுகின்றனர்” என இராணுவத் தளபதி கூறினார்.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலுள்ள மக்கள் பாரிய துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகத் தனது செவ்வியில் குறிப்பிட்டிருக்கும் சரத் பொன்சேகா,
அவர்களின் பிரச்சினைகளை ஆர்.சம்பந்தனாலேயோ அல்லது தமிழ் ஈழம் எனக் கூறப்படும் பகுதியின் பிரதமராலேயோ தீர்த்துவைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நலன் கருதிய ஊடகச் செயற்பாடு
மோதல்கள் இடம்பெற்றாலும், இடம்பெறாவிட்டாலும் நாட்டின் நலனில் அக்கறைகொண்டு ஊடகவியலாளர்கள் நடுநிலையாகச் செயற்பட்டு மக்களுக்கு அறிவூட்டவேண்டும் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
தமது பொறுப்புக்களை உணர்ந்து சில ஊடகங்கள் செயற்படுவதாகத் தான் கருதவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
தமது சொந்தக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு எவரும் ஊடக சுதந்திரம் வழங்க முடியாது. எமக்கு ஊடகவியலாளர்களைப் பற்றி நன்கு தெரியும். சொந்தத் தேவைகளுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக ஊடகவியலாளர்கள் குரல்கொடுப்பார்கள்” எனவும் அரசாங்க ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேலும் கூறியிருந்தார்.

No comments:
Post a Comment