இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய அரசியல் தீர்வுக்கான யோசனைத் திட்டத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் இந்தத் தீர்வுத்திட்ட யோசனையை முன்வைத்ததாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய வகையில் அதிகாரங்களைப் பகிரக்கூடிய பரந்துபட்ட மற்றுமொரு அறிக்கையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விரைவில் கையளிப்பார்கள்” என அவர் கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதி கலந்துகொண்டபோதும், ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளாமை குறித்து அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை இணைத்துக்கொண்டாலே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்வோம் எனக் கூறி ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் கடந்த கூட்டத்தில் வெளிநடப்புச் செய்திருந்தனர்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இனம்காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு 90 வீதமான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அனைத்துக் கட்சிகளுக்கும் இடையில் எஞ்சிய 10வீத இணக்கப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார்.
திங்கட்கிழமை நடைபெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளோ கலந்துகொள்ளவில்லையென அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் செய்யும் தந்திரோபாயமே இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க குற்றஞ்சாட்டியிருந்தார்.
அரசாங்கத்தில் ஏற்படும் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காக காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியாகவே இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு கூட்டப்படுகிறது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், “அரசாங்கம் மோதல்களை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு எதிராக காலடிகளை எடுத்துவைப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முயற்சிக்கிறது. பயங்கரவாதம் மோதல்கள் மூலம் தோற்கடிக்கப்படவேண்டும். எனினும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று இருக்கவேண்டும்” எனக் கூறினார்.

No comments:
Post a Comment