இலங்கையில் அமைதி முயற்சிகளை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஜஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.
நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களை மட்டுமே விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர்களான அமைச்சர் எரிக் சொல்கெய்ம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர் ஹன்சன் பெளயர் ஆகியோருடன் வன்னியில் சந்திப்புக்களை மேற்கொள்ள நாம் ஆர்வமாக உள்ளோம், அது விரைவில் நடைபெறும். நோர்வே தவிர்ந்த எந்த நாட்டின் அனுசரணையையும் நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு இலங்கையில் நோர்வே அமைதி முயற்சிகளை ஆரம்பித்திருந்தது.
இதனிடையே, இலங்கையில் அமைதிப் பேச்சுக்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் முகமாக தென்னாபிரிக்கா கடந்த வாரம் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது.
அதாவது, இந்தியாவின் பின்னணியுடன் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தென்னாபிரிக்கா அனுசரணை வழங்க முன்வந்திருந்தது.
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனுகூலமான சமிக்ஞைகளை தெரிவிக்க வேண்டும் என சிறிலங்காவின் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனை சந்தித்த போது தென்னாபிரிக்காவின் அனைத்துலக அமைதிக்கான செயற்பாட்டாளரும், பிரதி அமைச்சருமான இராதகிருஷ்ண படையாச்சி தெரிவித்திருந்தார்.
மேலும், விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் தொடர்பாக ஜஸ்லாந்து குடியரசின் அரச தலைவர் ஒலாபு ரங்னர் கிறிம்சன் ஆராய்ந்ததுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களில் அனுசரணைகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடபகுதியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் கிறிம்சன் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment