வெற்றியின் விளிம்பில் இருக்கும் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக் குறித்து அரசாங்கம் கவனம்செலுத்தவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதிவரை ஒருதலைப்பட்டசமான போர்நிறுத்த உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.
இந்த அறிவிப்புத் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம், நோர்வேயுடன் கலந்துரையாடியுள்ளதாக என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம, விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் அரசாங்கப் படைகள் வெற்றியீட்டிவரும் சூழ்நிலையில், விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்புத் தொடர்பாக அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லையெனக் கூறினார்.
வெற்றியின் விழிப்பில் நாம் இருக்கும் நிலையில் இவ்வாறான போர்நிறுத்தங்களுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லையெனவும், தற்பொழுதுள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லையெனவும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம,
இந்த விடயம் தொடர்பாக நோர்வேயுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லையெனவும் தெரிவித்தார்.
இராணுவ வெற்றிகளை திசைதிருப்ப தென்னிந்தியத் தலைவர்கள் முயற்சி- விமல் வீரவன்ச
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் பெற்றுவரும் வெற்றிகளைத் திசைதிருப்பும் நோக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி போன்ற தென்னிந்தியத் தலைவர்கள் செயற்பட்டுவருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதாகவும், இதனால் கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கருணாநிதி கூறியிருப்பதானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எனவும் விமல் வீரவன்ச கூறினார்.
கச்சைதீவை இந்தியா மீளப்பெற்றுக்கொண்டால் அதன்மூலம் விடுதலைப் புலிகள் பயனடைவார்கள் எனவும், இதனால் இந்திய இலங்கை இராஜதந்திர உறவு பாதிக்கப்பட்டுவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். விடத்தல்தீவு மற்றும் இலுப்பைக்கடவை ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி இராணுவத்தினர் வெற்றிபெற்றுவரும் நிலையில்,
இராணுவத்தினரின் தொடர் வெற்றியைத் தடுக்கும் வகையில் கருணாநிதி போன்ற தென்னிந்தியத் தலைவர்கள் செயற்பட்டுவருவது விரும்பத்தகாதது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment