கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 75 பேருக்கு, அரசாங்கத்தினால் தென் கொரியாவில் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று த.ம.வி.புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்குமிடையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
த.ம.வி.புலிகள் உறுப்பினர்களுக்கு உடனடியாக வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அதற்கான சாத்தியங்களை ஆராய்வதாகவும், தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
“இந்த உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். இதற்காகவே நாம் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவிரும்புகிறோம். இது சாத்தியமாகாவிட்டால் அவர்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தத் தலைப்படுவார்கள். இதனை நாம் விரும்பவில்லை. கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவே நாம் விரும்புகிறோம்” என த.ம.வி.பு அமைப்பின் பேச்;சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதலமைச்சர் பிள்ளையானின் வேண்டுகோளுக்கிணங்க, த.ம.வி.பு அமைப்பின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க அராசங்கம் இணங்கியிருப்பதாகவும் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கில் நான்கில் மூன்று இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றிருப்பதாகவும், இதன்காரணமாக அவர்கள் வன்முறைகளில் ஈடுபடத் தலைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த வாரம் சுமார் 20 இற்கும் மேற்பட்ட த.ம.வி.புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றிருப்பதாகவும், இன்னும் ஒரு குழுவினர் இந்த வாரம் தென்கொரியாவுக்குச் செல்வதற்கான பரீட்சைக்குத் தோற்றவிருப்பதாகவும் தெரியவருகிறது.

No comments:
Post a Comment