Saturday, 26 July 2008

நவம்பர் மாத இறுதியில் விடுதலைப் புலிகள் மாவீரர் தினத்தைக் கொண்டாடும்போது அங்கு எதுவும் இருக்காது- சரத் பொன்சேகா

இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களில் இராணுவத்தினர் வெற்றிகரமாக முன்னேறிவரும் நிலையில், விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு இந்த மோதல்கள் உதவும் எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியிருந்தார். இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருக்கும் மக்களை, இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருக்கும் இராணுவத் தளபதி, தமது கட்டுப்பாட்டின்கீழிலிருந்து வெளியேறும் மக்களைத் தடுப்பதற்கு எதிரிகளுக்கு நேரம் இருக்காது எனவும் கூறியுள்ளார்.

2006-2007ஆம் ஆண்டு காலப் பகுதியில் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று தற்பொழுது வன்னியிலிருந்து பெருந்தொகையான மக்கள் வெளியேறுவார்கள் எனவும், அவர்களுக்கு பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் இராணுவத் தளபதி அந்த ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளார்.

நவம்பர் மாத இறுதியில் விடுதலைப் புலிகள் மாவீரர் தினத்தைக் கொண்டாடும்போது அங்கு எதுவும் இருக்காதெனவும், விடுதலைப் புலிகள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே ஒன்றுகூடுவார்கள் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

தற்பொழுது மல்லாவி-துணுக்காய் மற்றும் மாங்குளம்-வெள்ளான்குளம் பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இராணுவத்தின் 57 மற்றும் 59 பிரிவு இராணுவ முகாம்கள் முல்லைத்தீவை நோக்கிய படை நகர்வை முன்னெடுத்துவருவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“நேற்று மாலை மல்லாவி பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவின் பிரதித் தலைவர் உட்பட 27 பேரினது சடலங்களை மீட்டிருப்பதாகவும், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளிலிருந்து பெருமளவான ஆயுதங்களைக் கொண்டுவந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளை நோக்கி ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் வவுனியா முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் கடுமையான மோதல்களால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு-மாங்குளம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரும், பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் கொல்லப்பட்டார்.

மன்னார், வவுனியா பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கமைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வவுனியா நோக்கிச் சென்றபோதே அவர் கொல்லப்பட்டதாகவும், இடம்பெயர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உதவும் அமைப்பின் தலைவராக இவர் செயற்பட்டு வந்ததாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் துணுக்காய் பிரதேச செயலாளர் நந்தகுமார் கொல்லப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

mayan said...

nedukkalapoovan

இந்த எச்சரிக்கையையும் வழமையான வெற்றுவேட்டு என்று புறந்தள்ளாமல்.. விடுதலைப்புலிகளும் வன்னி வாழ் தமிழ் மக்களும் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் மக்கள் மீது அகோர எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உண்டு. இதன் மூலம் மக்களை வன்னியில் இருந்து வவுனியா நோக்கி நகர்த்தி.. அவர்களை மனிதக் கேடயமாகப் பாவித்தபடி இராணுவம் முன்னேற முனையலாம்.

இவ்வாறான ஒரு நகர்வை வாகரை நோக்கி இராணுவம் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்கள் விழிப்புக்குழுக்களை அமைத்து ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாடுகளை முறியடிக்க போராளிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு.. மக்கள் வாழுமிடம் எங்கும் ஒடுங்கிய பாதுகாப்பான பதுங்குகுழிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்களும் போராளிகளும் 100% தம்மை ஒரு முழுமையான யுத்தத்துக்கு தயார் செய்து கொள்வதே சிறீலங்கா அரசபடைகளின் இராணுவ உக்திகளை முறியடித்து.. மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் உயிர்நாடியை பாதுகாக்க வகை செய்ய முடியும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் இராணுவத் தீர்வுக்கு எதிராக கண்டனக்குரல்களை சர்வதேச அரங்கில் அதிகரிக்க வேண்டும். வன்னி முற்றுகையை இன அழிப்பாக சுட்டிக்காட்டுதல் வேண்டும். மக்களை திட்டமிட்டு விரட்டி அடிக்கும் செயல்களை உலகுக்கு உடனுக்குடன் சர்வதேச மொழிகளில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

வன்னியில் இடம்பெயர்ந்து துன்பச் சுமைகளை சுமக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்க பெருமெடுப்பில் முன் வருவதோடு சர்வதேச அமைப்புக்களையும் இதில் ஒருங்கிணைத்துச் செயற்படுத்த புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் கடினமாக உழைக்க முன் வர வேண்டும். அப்போதுதான் அரசின் போர் வெறியில் இருந்து மக்களையும் போராட்டத்தையும் பாதுகாக்க முடியும்.

சிங்கள இராணுவம் எமது மண்ணை முழுமையாக அபகரிப்பின் பெரும் மனிதப் பேரவலம் நிகழும். செம்மணிகள் போல பல புதைகுழிகள் வன்னி மட்டுமன்றி வடக்குக் கிழக்கு எங்கும் உருவாகும். பெருமளவு சிங்களவர்கள் திட்டமிட்டு தமிழர் தாயமெங்கும் குடியமர்த்தப்பட்டு.. தமிழர் தேசம் என்ற அடையாள இருப்பை சிங்கள அரசு இல்லாமல் செய்யும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு உலகெங்கும் உள்ள மக்கள் சிங்கள அரசின் கபடத்திட்டத்தை முறியடிக்க போர்க்கோலம் பூணுவதும் விவேகமாக நடந்து கொள்வதுமே இவ்விக்கட்டான வேளையில் அவசியமாகிறது