Saturday, 26 July 2008

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் திறமையாக வரையப்பட்ட நகர்வாகும்: "சண்டே ரைம்ஸ்"


தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தம் மிகவும் திறமையாக வரையப்பட்ட இராஜதந்திரமான நகர்வாகும். இந்த அறிவித்தல் சிறிலங்கா அரசுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சார்க் மாநாட்டு காலப்பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமையே முதலில் வெளிவந்திருந்தது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் "சார்க் மாநாட்டை நாம் குழப்பப்போவதில்லை, தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு சார்க் அமைப்பில் உள்ள ஏனைய நாடுகள் ஆதரவளிக்கும் என நாம் நம்புகின்றோம்" என்று தெரிவித்திருந்தார்.

இதனை மீள்பதிப்புச் செய்த கொழும்பு மற்றும் யாழ். தமிழ் நாளேடுகள் இந்த செய்தியை முதன்மைப்படுத்தியிருந்தன. பா.நடேசனின் தகவலை உறுதிப்படுத்தும் முகமாக பெருமளவிலான தொலைபேசி அழைப்புக்கள் கிளிநொச்சியை நோக்கிப் பறந்தன.

எனினும் பா.நடேசன் உடனடியாக பதிலளிக்கவில்லை, பின்னர் அழைப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழ் ஊடகங்களை தொடர்புகொண்ட பா.நடேசன் நேர்காணலை மொழிபெயர்க்க வேண்டாம் எனவும், விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அறிவித்தல் விரைவில் வரும் எனவும் தெரிவத்திருந்தார்.

திங்கட்கிழமை முழுவதும் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைமை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியது.

செய்மதி தொலைபேசிகளின் ஊடான உலகின் தலைநகர்களுடன் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாடுகளில் உள்ள தமது முக்கிய உறுப்பினர்களுடன் மட்டுமல்லாது, வேறு முக்கிய தரப்பினருடனும் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏனைய நாடுகளின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் பரிந்துரைகள் தொடர்பாக வன்னி தலைமைக்கு விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை (22.07.08) விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அறிவித்தல் வெளிவந்திருந்தது. பத்து நாள் போர் ஓய்வை விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தம் மிகவும் திறமையாக வரையப்பட்ட இராஜதந்திரமான நகர்வாகும். இந்த அறிவித்தல் அரசுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனை அரசு நிராகரித்துள்ள போதும் அதற்கு பதிலளிப்பது தொடர்பாக அது ஆலோசித்து வருகின்றது. அரச தரப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனினும் அமைதிக்கான அனுசரணையாளராக தனது பணியை தொடரும் நோர்வே, விடுதலைப் புலிகளின் அறிவித்தலை அரசுக்கு கடந்த செவ்வாய்கிழமை அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது.

ஆனால் தாம் விடுதலைப் புலிகளுடன் எந்த உடன்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அரசின் அறிவித்தல்கள் பல அனுமானங்களை தோற்றுவித்துள்ளன.

சிறிலங்காவின் தென்பகுதியில் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என விடுதலைப் புலிகளின் தலைமை தென்பகுதியில் உள்ள தமது உறுப்பினர்களுக்கு பணித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் பல தாக்குதலாளிகள் கொழும்புக்குள் ஊடுருவியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது கொழும்புக்கு வரும் பிரதிநிதிகளின் வரவில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

விடுதலைப் புலிகள் வடபகுதியை தவிர ஏனைய பகுதிகளில் தாக்குதல் நடத்தும் வல்லமையுடன் இருப்பதையும் இது எடுத்து காட்டியுள்ளது.

எனினும் பலத்த பாதுகாப்புக்களுடன் சார்க் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாடுகளின் தலைவர்களின் கூட்டம் ஓகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் நாட்களில் நடைபெறவுள்ளன.

பண்டாராநாயக்கா அனைத்துலக நினைவு மாநாட்டு மண்டபத்தை துருவித்துருவி சோதனைகளை மேற்கொண்டு வரும் சிறப்பு படை கொமோண்டோக்கள் கதிரைகள், குளிரூட்டிகள் என்பவற்றையும் ஆராய்ந்து வருகின்றனர்.

வடபோர்முனையை பொறுத்தவரையில் வன்னியில் நகரும் படையினரின் மேலதிக நகர்வுகளை தடுக்கும் பொருட்டு விடுதலைப் புலிகள் தம்மை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

மணல் அரண்களை அமைத்துவரும் விடுதலைப் புலிகள் அதன் முன்பகுதியில் மிதிவெடிகளை புதைத்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு அவர்கள் பீரங்கிகள், மோட்டார்கள் போன்ற கனரக ஆயுதங்களையும் நகர்ந்தி வருகின்றனர்.

மணலாறுப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் பெருமளவில் மிதிவெடிகளை புதைத்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தம் எதிர்வரும் 4 ஆம் நாள் முடிவுக்கு வரும்போது படைத்துறை ரீதியாக முக்கிய கட்டத்தை அடைந்துவிடும். தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தை மோதல்கள் அண்மித்துள்ளதனால் அது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

விடுதலைப் புலிகளும் புதிய தாக்குதல்களுக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர். ஒன்று மட்டும் தெளிவானது. அதாவது, பெரும் மோதல்கள் நிகழப்போகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: