இந்தியாவரும் இலங்கை அரசியல் வாதிகள் ஏழு நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் விடுக்கவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு ஊடாக விசேட தகவலொன்றை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்குச் செல்லும் பெரும்பாலான இலங்கை அரசியல்வாதிகள் முற்கூட்டிய அறிவித்தல்களை வழங்காமல் செல்வதாகவும், இதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே அறிவித்தல் வழங்கப்பட்டாலே உரிய பாதுகாப்பை வழங்க முடியும் எனவும், அரசியல் தலைவர் இந்தியா செல்வதாயின் குறைந்தது 7 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்தக் கோரிக்கை தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தின் வெளிநாட்டு விவகாரம் தொடர்பான அலுவலகம், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளது. சென்னையிலுள்ள துணைத் தூதுவருக்குமான பாதுகாப்பை அதிகரிக்குமாறும் தமிழகப் பொலிஸார் கோரப்பட்டுள்ளனர். இந்தியா செல்லும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு, புதுடில்லி ஊடாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் உயர்மட்டக் குழுவினர் முன்னறிவித்தலின்றி திருப்பதி மற்றும் ஆந்திர மாநிலத்திலுள்ள புட்டபத்திக்கு விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்தே முற்கூட்டிய அறிவித்தல் தொடர்பாக இந்தியா கவனம் செலுத்தியிருப்பதாக இந்திய வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment