கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டதாக கூறும் அரசாங்கம், வேலுப்பிள்ளையின் தம்பியான பிள்ளையானிடம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் எதிர்காலத்தை கையளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இதனால் கிழக்கு மாகாணம் தொடர்ந்து வியாகுல நிலைமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண பிரதிகாவற்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய மாகாணத்தில் உள்ள சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று நிரூபத்தின் மூலம் இது தெளிவாகி இருப்பாதாகவும் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தேர்தலுக்கு பின்னர் பாதுகாப்பற்ற நிலைமை அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 22 காவற்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 19 காவற்துறை அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர் என பிரதி காவற்துறை மா அதிபரின் சுற்று நிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாகவும் ரங்கே பண்டார கூறியுள்ளார்.
இந்த நிலைமையில் கிழக்கு மாகாணத்தை மீட்டுள்ளதாக கூறும் அரசாங்கம் காடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதான முகாம்களை இன்னும் அழிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment