Friday, 11 July 2008

இரவிரவாக கும்மாளம் அடிக்கிறார் ஒலிபெருக்கி பாவிக்கும் கட்டுப்பாடுகள் ஜனாதிபதியின் மகனுக்கு இல்லையா?

இரவிரவாக கும்மாளம் அடிக்கிறார்
ஒலிபெருக்கி பாவிக்கும் கட்டுப்பாடுகள்
ஜனாதிபதியின் மகனுக்கு இல்லையா?


` இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி எவரும் இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கின்ற நிலையில் ஜனாதிபதியின் மகன் மட்டும் அவரது சகாக்களுடன் விடிய விடிய இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கும்மாளம் அடிக்கிறார்.

அவருக்கு ஒலிபெருக்கிக் கட்டுப்பாடுகள் எவையும் இல்லையா என்று ஐ.தே.கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சுற்றாடல்துறை அமைச்சின் குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தயாசிறி இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

ஒலி மூலம் சுற்றாடல் மாசடைவதைத் தடுப்பதற்காக இரவு 10 மணிக்குமேல் பொது நிகழ்வுகளுக்காக ஒலிபெருக்கியைப் பாவிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனால் இரவு 10 மணிக்குமேல் சமய நிகழ்வுகளுக்கோ அல்லது இசை நிகழ்ச்சிகளுக்கோ ஒலிபெருக்கியைப் பயன்படுத்த முடியாது.

இதன் காரணமாகக் கலைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் இந்த நிகழ்ச்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன.

அவற்றின் மூலம் சம்பாதிக்கின்ற பணத்தைக் கொண்டுதான் பாடகர்கள் ஆறு,ஏழு மாதங்களுக்கு உயிர்வாழ்கின்றனர்.

இதன் கரணமாகவே தமது தொழிலைப் பாதிக்காத வகையில் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவருமாறு கலைஞர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டு வருகின்றனர். ஆனால், சுற்றாடல் துறை அமைச்சு இதில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால், ஜனாதிபதியின் மகன் மாத்திரம் தனது சகாக்களுடன் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி விடிய விடிய இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
அவருக்கு மாத்திரம் நீதிமன்றத் தீர்ப்பு விதிவிலக்கா?

மற்றையவர்களின் காதுகளைச் செவிடாக்கிக் கொண்டு சூழலை மாசுபடுத்திக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த அவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஒலிக்கட்டுப்பாட்டால் சமய நிகழ்வுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
விகாரைகளில் அதிகாலை வேளைகளில் ஒலிக்கும் பிரீத் இப்போது ஒலிப்பதில்லை.
தர்ம ராஜ்யத்தைப் பாதுகாக்கப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டு நடாளுமன்றம் நுழைந்த ஜாதிக ஹெல உறுமயவினர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

No comments: