Monday, 7 July 2008

பேச்சுக்கான வாய்ப்பை தட்டிக்கழிக்கவே புதிய நிபந்தனைகள்: புலிகள் குற்றச்சாட்டு

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் இரண்டு நிபந்தனைகள் எதிர்காலத்தில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்களுக்கான வாய்ப்புக்களையே இல்லாமல் செய்வதாக அமைந்திருக்கின்றது என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டியிருக்கின்றர்கள்.

விடுதலைப் புலிகளை ஓரங்கட்டுவதையே நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த யோசனைகள் யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

எந்தவொரு எதிர்காலப் பேச்சுவார்த்தையும் விடுதலைப் புலிகளுடன் மட்டும் நடத்தப்படாது. இராணுவத் துணைக்குழுக்களாகவுள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துத் தமிழ்க் கட்சிகளுடனுமே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படும் என அரசாங்க சமாதானச் செயலகப் பணிப்பாளர் ராஜீவ விஜயசிங்க அறிவித்திருக்கின்றார்.

அத்துடன், இவ்வாறான பேச்சுக்களுக்கான முன்னோடியாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் எனவும் அவர் நிபந்தனை விதித்திருக்கின்றார். இது தொடர்பாக அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்குத் தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இருந்தபோதிலும் விடுதலைப் புலிகள் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை முழுமையாக மறுதலித்திருக்கின்றார்கள். சிறிலங்கா அரசாங்கத்துடனான எந்தவொரு பேச்சுக்களும் நோர்வேயினுடைய மத்தியஸ்த்தத்துடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், ஏனைய கட்சிகள் இவ்வாறான ஒரு பேச்சுவார்த்தையில் பங்குகொள்வதை அனுமதிக்க முடியாது

எனவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருக்கின்றார். "விடுதலைப் புலிகள் தமிழர்களின் உரிமைகளுக்காகவே போராடிவருகின்றர்கள்" எனத் தெரிவித்த இளந்திரையன், இவ்வாறான நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் சமாதானப் பேச்சுக்களைத் தவிர்த்துக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்படுகின்றது எனவும் குற்றஞ்சாட்டினார்.


இருந்த போதிலும், விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கும் அரசாங்கச் சமாதான செயலகப் பணிப்பாளர், எதிர்காலத்தில் எந்தவொரு பேச்சுக்கும் செல்வதற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

இந்த இரண்டு நிபந்தனைகளையும் விடுதலைப் புலிகள் கடந்த காலத்திலும் நிராகரித்து வந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அரசியல் அவதானிகள், விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களைத் தவிர்ப்பதற்காகவும், அவர்களை ஓரங்கட்டுவதற்கான ஒரு உபாயமாகவுமே இந்த நிபந்தனைகளை அரசாங்கம் முன்வைத்திருக்கின்றது எனச் சுட்டிக்காட்டியிரக்கின்றார்கள்.

நோர்வே மத்தியஸ்த்தர்களுடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசவேண்டியிருக்கும் சூழ்நிலையில் அவர்களை கிளிநொச்சி வருவதற்கு அனுமதி மறுத்த சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான நிபந்தனை ஒன்றை முன்வைத்திருப்பது ஆச்சரியமானதல்ல

எனவும் தெரிவித்திருக்கும் இளந்திரையன், "நோர்வே அநுசரணையாளர்கள் கிளிநொச்சிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படாவிட்டால், பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டை நாம் ஆரம்பம் முதலே வலியுறுத்திவருகின்றோம்.

நோர்வே அநுசரணையாளர்கள் கிளிநொச்சி வரவதற்கு பாதுகாப்பு இல்லை என அரசாங்கம் கூறிவருகின்றது. அப்படியானால் ஐ.நா.வின் பிரதிநிதிகள் எவ்வாறு ஒவ்வொரு நாளும் இங்கு வந்து செல்கின்றார்கள்?" எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

No comments: