Monday, 7 July 2008

ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும் தந்திச் செய்திப் போராட்டம் ஆரம்பம்

நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்துமாறு கோரி, இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், ஏனைய முன்னணி ஊடக அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நாடளாவிய ரீதியிலான 'தந்திச் செய்தி' போராட்டம் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு கோட்டை தபால் பரிவர்த்தன நிலையத்தில் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

'ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துக, ஊடக சுதந்திரத்திற்கு ஊறுவிளைவிக்கும் குண்டர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிடுக, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு சகல தரப்பினருக்கும் உத்தரவிடுக, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி செய்தி சேகரிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துக, ஊடகவியலாளர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்காதீர்' ஆகிய கோரிக்கைகள் அடங்கிய தந்திச் செய்திகளே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நாடெங்கிலுமுள்ள ஊடகவியலாளர்களும், சிவில் சமூக நிறுவனங்களும் தத்தமது பகுதிகளிலிருந்து மேற்படி கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றினை தமது தந்திச் செய்தியில் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்குமாறும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று தொடக்கிவைக்கப்பட்ட இந்தத் தந்திச் செய்திப் போராட்டத்தில் பொதுமக்களும் கலந்துகொண்டதாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் போத்தல ஜயந்த தெரிவித்துள்ளார்.

No comments: