இலங்கை சிங்களவர்களாலேயே ஆளப்படும் - தளபதி
சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஒரு நாட்டில் ஆள்வார்களாயின் அது பெரும் ஆபத்துக்கு உரியதாகும். அது பெரும் பிரச்சினையாக அமையும் எனவும் அது நடைபெற முடியாத ஒன்றாகும் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த நாடு எப்போதும் 74 சதவீதத்தினரான சிங்கள இனத்தவராலேயே ஆளப்படும்.
இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில், நாம் உயிர்வாழ வேண்டுமானால், நாம் தியாகம் செய்தே ஆக வேண்டும். இந்த வேளையில் சாதாரண மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்கள் தவிர்க்க முடியாதவையே.
அரச சார்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பண வீக்கம் 29 சத வீதத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சாதாரண மக்கள் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்நோக்குவது தவிர்க்க முடியாததாகும். அரசாங்கம் பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் போராடி வருகிறது என்பதனை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
கெரிலாக்கள் நாட்டின் வடக்கில் தனியரசு ஒன்றை நடத்துகிறார்கள். அதனை உடைத்து விடுவதற்காக கடந்த வருடம் ஜுலை மாதம் தொடக்கம் பாதுகாப்புப் படையினர் போரிட்டு வருகிறார்கள். இந்த முயற்சி மிக மெதுவாகவே நடை பெற்று வருகிறது என்றார்.

No comments:
Post a Comment