Friday, 4 July 2008

தவறான பொருளாதார முகாமைத்துவமே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்: ஐ.தே.கட்சி

நாட்டின் 4 பாரிய அரச நிறுவனங்கள் கடந்த வருடம் பில்லியன் கணக்கான ரூபாய்கள் நட்டத்தைச் சந்தித்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபை 2.7 பில்லியன் ரூபாக்களையும், ரயில்வே திணைக்களம் 4.2 பில்லியன் ரூபாக்களையும், தபால் திணைக்களம் 2.2 பில்லியன் ரூபாக்களையும், இலங்கை போக்குவரத்து சபை 3.5 பில்லியன் ரூபாக்களையும் கடந்த வருடம் நட்டமாகச் சந்தித்துள்ளது என மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மின்சார சபை தினமும் 70 மில்லியன் ரூபாக்களை இழப்பதாகவும், தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாடு இன்று பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக பெர்து விவாதம் ஒன்றுக்கு வருமாறு அரசாங்கத்தை அழைக்கிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூட, நாட்டின் பொருளாதாரம் உறுதியற்ற நிலையிலிருப்பதாகக் கூறியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள ரவி கருணாநாயக்க, இந்தியாவிடமிருந்து 10,000 தொன் உப்பினை இறக்குமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும், நாலா புறமும் கடலினால் சூழப்பட்டுள்ள ஒரு நாடு இவ்வாறு உப்பினை இறக்குமதி செய்வது வெட்கத்துக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாக்களை செலவிடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 90 மில்லியன் ரூபாக்களை மாத்திரமே அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சார்க் மாநாட்டிற்காக 2.8 பில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: