Friday, 4 July 2008

அரசாங்கம் கருணாவை கைதுசெய்யவேண்டும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை, இலங்கை அரசாங்கம் கைதுசெய்யவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சென்றதாகக் குற்றஞ்சாட்டி பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு இலங்கை திரும்பியிருக்கும் கருணாவை, இலங்கை அரசாங்கம், குடிவரவு குடியகல்வுச் சட்டத்துக்கு அமைய கைதுசெய்யவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருணா கைதுசெய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டுமெனவும், அவருக்கு தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படக்கூடாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கருணா மீதான பொலிஸ் விசாரணைகள் தொடர்பாக சாட்சியமளித்தவர்கள் ஆபத்தில் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை கவலை தெரிவித்துள்ளது.

“கருணா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாட்சியங்கள் வழங்கியவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறியமை குறித்துக் கவனம் செலுத்தியிருப்பதாகவும், போர் குற்றவாளிகளையும், சாட்சிகளையும் பாதுகாப்பதற்கு எதிர்காலத்தில் பிரித்தானியா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவதானிக்கவுள்ளோம்” என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்துக்கமைய போர் குற்றங்களில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானியச் சட்டத்தில் இடமிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சித்திரவதை செய்தமை உள்ளிட்ட போர் குற்றங்களுக்காக 2005ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் போர்கடவுள் என வர்னிக்கப்படும் பர்யாட் சர்வார் சர்டாட்டுக்குப் பிரித்தானிய நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தமையை சர்வதேச மன்னிப்புச்சபை உதாரணமாகக் கூறியுள்ளது.

1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த கருணா அம்மான் சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைச் சுட்டுக்கொன்றதாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

No comments: