Sunday, 13 July 2008

இந்தியத் தேவைகளுக்காக புதிய அரசியலமைப்பு அறிமுகம் செய்ய மகிந்த திட்டம்: எதிர்த்துப் போராட ஜே.வி.பி.

அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா,

இந்தியாவின் தேவைகளுக்காக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் முயலுமானால் போராடி அதனைத் தடுத்து நிறுத்துவதற்குத் தயங்கப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றார்.

1987 ஆம் ஆண்டு பலாத்காரமாக எமது நாட்டுக்குள் புகுந்து உயிரிழந்த இந்தியப் படையினருக்கு நினைவுத் தூபி அமைக்கும் அளவுக்கு அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மண்டியிட்டுள்ளார்.

இந்தியாவிடம் மண்டியிட்டுள்ள அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் 675 சதுர மைல் நிலத்தை இந்தியாவுக்குத் தாரை வார்த்துள்ளது எனவும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நிலத்தில் வாழ்ந்து வந்தவர்கள் தற்போதும் அகதி முகாம்களில்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்தியாவினதும் மேற்கு நாடுகளினதும் தேவைகளுக்கு ஏற்பவே அரசாங்கம் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை வரைந்திருக்கின்றது எனவும் தெரிவித்த ரில்வின் சில்வா இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:

மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் தொடர்ச்சியாகத்தான் அமைச்சர் திஸ்ஸ விதாரண இப்போது புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை பற்றி வலியுறுத்தியிருக்கின்றார்.

சமஷ்டி முறையிலான தீர்வை தேசியப் பிரச்சினைக்கு முன்வைப்பதற்கு அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளது. அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவைப் பதவிக்குக் கொண்டுவருவதற்கு முன்னின்று உழைத்தோம்.

தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட மகிந்த சிந்தனையில் ஒற்றை ஆட்சிக்குக் கீழ் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதற்காகவே அப்போது மக்களுடைய ஆணையும் கிடைத்தது. எனவே அரசாங்கம் அதனை மீறிச் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவது மக்களுடைய ஆணைக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே இருக்கும்.

இந்தியாவின் தேவைகளுக்காக எமது அரசியலமைப்பை சமஷ்டி அரசியலமைப்பாக மாற்றியமைக்க முனைந்தால் அதற்கெதிரான போராட்டங்களை நாம் முன்னெடுப்போம்.

அதற்கு நாம் அனுமதி வழங்கப்போவதில்லை. 1987 ல் ஆக்கிரமிப்பாளர்களாகவே இந்தியப் படைகள் இங்கு வந்தன. தேசப்பற்றாளர்கள் அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். உயிர் துறந்தனர்.

அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ சார்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அன்று இந்தியப் படையினருடைய வருகைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தது.

ஆனால் இப்போது மகிந்த ராஜபக்ஷ இந்தியப் படையினருக்கான நினைவுத் தூபி ஒன்றை அமைத்து வருகின்றார்.

இது மற்றொரு நாட்டின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உயிர் துறந்த தேசப்பற்றாளர்களை அவமதிக்கும் செயற்பாடாகும்.

இவ்வாறு ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கின்றார்.

No comments: