பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்காக 661 தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் 1550 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்யமுடியும்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனம் ஒன்றின் வரிவிலக்கின்றிய சந்தைப் பெறுமதி 6.2 பில்லியன் ரூபா எனக் கூறப்படுகிறது.
225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான தீர்வையற்ற வாகன இறக்குமதிப் பத்திரம் பாராளுமன்ற விவரகார அமைச்சின் ஊடாக வழங்கப்படவிருப்பதுடன்,
மாகாணசபை உறுப்பினர்கள் 386 பேருக்குமான வாகன இறக்குமதிப் பத்திரம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஊடாக வழங்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களைத் தவிர ஏனைய மாகாணசபைகளின் உறுப்பினர்கள் வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என மாகாண சபைகள் அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.
எனினும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் 31 பேருக்கும் இம்முறை தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என உள்ளூராட்சி மன்ற மற்றும் மகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தலா 35,000 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்களையும்,
மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் தலா 17,500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்களையும் இறக்குமதி செய்யமுடியுமெனவும் பெறுமதிகூடிய, ஆடம்பர சொகுசு வாகனங்களான பென்ஸ், அவுடி, பி.எம்.டபிள்யூ., டொயாட்டா பிராடோ, மிஸ்டிபிஷி மொன்டரோ போன்றவற்றை அவர்கள் இறக்குமதி செய்யமுடியும் எனவும் தெரியவருகிறது.
இதில் எந்தவொரு வாகனத்தினதும் தற்போதைய சாதாரண சந்தைப் பெறுமதி 15 மில்லியன் ரூபா எனவும்,
அரசாங்கத்தால் வழங்கப்படும் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் உள்ளூர் சந்தையில் 5 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அனுமதிப் பத்திரத்தை விற்பனை செய்வதோ அல்லது உரிமை மாற்றம் செய்வது சட்டரீதியற்றது. தீர்வையற்ற வானகத்தை இறக்குமதி செய்வதற்கு உரியவர் வங்கிக் கடனைப்பெற்றுக்கொள்ள முடியும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்தவொரு அமைச்சரும் சந்தைப் பெறுமதி தலா 7.5 மில்லியன் பெறுமதியான இரண்டு வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி விசேட சுற்றுநிருபமொன்றை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment