Sunday, 27 July 2008

யால சரணாலயப் பகுதியில் படையினர் குவிக்கப்பட்டபோதும் பூனையைக் கூட பிடிக்க முடியாத நிலை

படையினர் குவிக்கப்பட்டபோதும் பூனையைக் கூட பிடிக்க முடியாத நிலை; ருக்மன் எம்.பி.

ஜீவா சதாசிவம்

யால சரணாலயப் பகுதியில் புலிகளின் ஊடுருவல்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனநாயக்கா அப்பகுதியில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களால் இதுவரை ஒரு புலிக்குட்டியையோ, பூனைக்குட்டியையோ பிடிக்க முடியாதுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

வனங்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். வனப் பாதுகாப்பு திணைக்களம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே தற்போது நடத்தப்படுகின்றது.

நாட்டின் முக்கியமான வனப் பாதுகாப்பு திணைக்களம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை மேற்படி திணைக்கள ஊழியர்களுக்கு உரிய முறையில் கொடுப்பனவுகளும் சலுகைகளும் வழங்கப்பப்படாதுள்ளமை சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

வன பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். சிறந்த முறையிலான பாதுகாப்பு இன்மையால் இன்று பல சரணாலயங்கள் மூடப்பட்டுள்ளன.

யால வனப்பகுதியில் புலிகளால் பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த பிரதேசங்களியே அதிகளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல்கள் இடம்பெற்றாலும் கூட இதுவரை ஒரு சந்தேக நபரையாவது இராணுவத்தினரால் கைது செய்ய முடியாதுள்ளது.

தாக்குதல்கள் நடத்தப்படுவது ஓரிடமாக இருக்கும். பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது வேறொரு இடமாக இருக்கும். யால சரணாலயத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அத்தியாவசியமானதொன்றாகும்.

வனப்பகுதிகளில் பெருமளவான மரங்கள் வெட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பல்வேறான தாக்குதல்கள் இடம்பெற்றாலும் கூட குறித்த பிரதேசத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரால் ஒரு பூனையைக் கூட பிடிக்க முடியாதுள்ளது.

இதேவேளை, ஒரு சில பகுதிகளில் யானைகளின் தொல்லையால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments: