Sunday, 6 July 2008

விடுதலைப் புலிகள் தொடர்பாக அமெரிக்காவின் கடும்போக்கு நிலைப்பாடு இளகிவிடுமோ என்ற அச்சம் கொழும்பைப் பீடித்திருக்கிறது

மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகக் கூறிவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவுக்கு உள்ளே மாத்திரமன்றி ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் படை நடவடிக்கைகள் உட்பட, ஏனைய நாடுகள் தொடர்பில் அமெரிக்கா கடைப்பிடித்துவரும் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாமென்ற எதிர்பார்ப்பும் வலுவாகக் காணப்படுகிறது.

குறிப்பாக, 'போர் விரும்பி' என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்ஷின் நிர்வாகம் தற்பொழுது கடைப்பிடித்துவரும்; கொள்கைகள், ஒபாமா வெற்றிபெற்றால் முற்றாக மாற்றம் பெறலாமென ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமா பெற்றிபெற்று அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டால், எங்கே தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும் அமெரிக்கா மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் இப்போது இலங்கையின் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

கொழும்பு ஊடகங்கள் சிலவற்றில் இது தொடர்பாக வெளியாகியுள்ள சில ஆக்கங்கள் இந்த அச்சத்தை பெருமளவில் வெளிக்காட்டியுள்ளன.

அமெரிக்காவிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான தமிழர்கள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் விடுதலைப் புலிகளின் கொள்கை, அவர்களின் போராட்டத்தின் குறிக்கோள் போன்றவை குறித்தும், ஈழப்போராட்டம் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு விளக்கமளித்து அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முயற்சித்திருப்பதாக இந்த ஆக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் பராக் ஒபாமாவும், ஹிலாரி கிளின்டனும் சூறாவளிப் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அவர்கள் ஆங்காங்கே வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் இவர்களின் இந்த அச்சத்துக்கு பிரதான காரணமாக இருக்கின்றன.

"அனைத்துப் பயங்கரவாத அமைப்புக்களையும் ஒரே எல்லைக்குள் வைத்துப் பார்க்கமுடியாது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காகப் போராடிவருகின்றனர். அதேபோல ஸ்பெயினில் பஷ்குயி பிரிவினைவாதிகள் போராடிவருகின்றனர். அனைவரினதும் குறிக்கோள் ஒன்றாக இருக்காது.

எவ்வொரு போராட்டத்தின் கொள்கையும் மாறுப்பட்டதாகவே காணப்படும" என ஹிலாரி கிளின்டன் பிரசாரக் கூட்டமொன்றில் கூறியிருந்தார். "20ஆம் நூற்றாண்டில் நிறத்தை அடிப்படையாகக் கொண்டே பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

இலங்கை, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இனங்களுக்கிடையிலான வேறுபாடுகள் போன்ற பிரச்சினைகளே காணப்படுகின்றன" என்று பராக் ஒபாமா கூட்டமொன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இவர்களின் இத்தகைய கருத்துக்கள் தவிரவும், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் பலரும், அவ்வப்போது ஆங்காங்கே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக வெளியிட்டிருக்கும் கருத்துக்களும் அமெரிக்கா தொடர்பாக இலங்கையில் தோன்றியிருக்கும் அச்சத்துக்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்துள்ளன.

"விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து விலகிச்சென்று ஜனநாயக வழியில் செயற்படுவதற்கான தளத்தை அமைத்துக்கொடுக்கவேண்டுமென இராஜாங்கத் திணைக்களத்திடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன.

பயங்கரவாதத்துக்கும், சட்டரீதியான கெரில்லாப் போராட்டத்துக்கும் என்ன வித்தியாசம்? இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் சுதந்திர பிராந்தியமொன்றைக் கோருவதில் எந்த எதிர்ப்பும் இல்லை" என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிரட் ஷெர்மன் 2006 மார்ச்சில் கூறியிருந்தார்.

"தமிழர்கள் போன்ற சிறுபான்மை இனங்களுக்கு சுதந்திரப் பிராந்தியமொன்றை வழங்குவதே தீர்வாக அமையும். உலகளாவிய ரீதியில் இவ்வாறான பிரச்சினைகள் இந்தமுறையில் வெற்றிகரமாகத் தீர்த்துவைக்கப்பட்டதை நாம் கண்டுள்ளோம்.

கனடாவின் கியூபெக், பிரித்தானியாவில் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும்" என அமெரிக்க காங்கிஸ் உறுப்பினர் பிராங் பால்வொன் தெரிவித்திருக்கிறார்.

"இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், அதிகரித்திருக்கும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கண்காணிப்பதற்கு விசேட பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பவேண்டுமென இராஜாங்கச் செயலாளர் டொக்டர்.கொண்டலீசா ரைசிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்" என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ருஷ் ஹோல்ட் 2006ஆம் ஆண்டு கூறியிருந்தார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலிருந்து வெளியாகியிருக்கும் இந்தக் கருத்துக்களின் பின்னணியில், ஜனாதிபதி தேர்தல் களத்தில் வெற்றிகளைக் குவித்துவரும் பராக் ஒபாமாவின் கொள்கைகளையும் இணைத்துப் பார்க்கும்போது, விடுதலைப் புலிகள் தொடர்பாக அமெரிக்காவின் கடும்போக்கு நிலைப்பாடு இளகிவிடுமோ என்ற அச்சம் கொழும்பைப் பீடித்திருக்கிறது.

இதே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான பில் கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டது என்பது இவர்களுக்குத் தெரியாமலில்லை.

எனினும், அப்போது கிளின்டன் மேற்கொண்ட அந்தத் தீர்மானத்துக்கு, அப்போதைய இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட தீவிர பிரசாரமே காரணமாக அமைந்தது என்று உறுதியாக நம்பும் இவர்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், விடுதலைப் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை கடுமையாகப் பேணுவதற்குப் பல கதிர்காமர்கள் இலங்கைக்குத் தேவைப்படும் என்று கூறிவருகின்றனர்.

http://shockan.blogspot.com/2008/07/blog-post_2252.html

1 comment:

ttpian said...

it is noteworthi to mention here that Mr.Glindon opposed against the srilankan presence in UN security council:srilanka lost it's seat there!
so hope for the best!
Make new friends!