கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் இன்று பொங்கு தமிழ் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு ரொறன்ரோவின் மத்திய பகுதியான Keele & Sheppard சந்திப்பில் அமைந்துள்ள Downview Park வெளியரங்க மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு தொடங்கவுள்ளது.
நிகழ்வில் உலக நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் சிறப்புரையாற்றவுள்ளதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
இந்த வெளியரங்க மைதானம் கடந்த காலத்தில் பல பாரிய வெளியரங்க நிகழ்வுகளுக்குப் பெயர் பெற்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக றோலிங் ஸ்ரோன் என்ற உலகப்புகழ் பெற்ற பொப்பிசைப் பாடகரின் இசை நிகழ்வு, கத்தோலிக்க பாப்பரசர் 2 ஆவது அருள் சின்னப்பர் கலந்துகொண்ட புகழ்பெற்ற உலக இளையோர் நாள் உட்பட பல பாரிய நிகழ்வுகளுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும்.
ரொறன்ரோ பெரும்பாகத்தின் எப்பகுதியிலிருந்தும் மக்கள் இலகுவாக சென்றடைவதற்கு ஏதுவாக பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்தி அல்லது பிரதான பெருந்தெருக்கள் மூலம் பயணித்துச் செல்ல வாய்ப்பாகவும் இந்த வெளியரங்க மைதானம் அமைந்துள்ளது.
ரொறன்ரோ மத்தியில் உள்ள குயின்ஸ்பார்க் வெளியரங்கில் 25.09.2004 இல் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 80,000-க்கும் அதிகமான தமிழ்மக்கள் கலந்துகொண்டு தமது பேரெழுச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இன்று நடைபெற ஏற்பாடாகியுள்ள நிகழ்வில் குறைந்தது 100,000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு, தமது இன மான உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment