Tuesday, 1 July 2008

லப்ரொப் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் பாராளுமன்றத்திற்கு எடுத்துச்செல்லத் தடை

பாராளுமன்றத்திற்கு "லப்ரொப்' உட்பட இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டுசெல்வதற்கு அரசு தடைவிதித்துள்ளது.

இலத்திரனியல் உபகரணங்கள் மூலம் பாராளுமன்றத்திற்குள் வெடிபொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புத் தரப்பினர் விடுத்த அறிவுறுத்தலுக்கமைய, "லப்ரொப்' உட்பட அவை போன்ற உபகரணங்கள் பாராளுமன்றத்திற்குள் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இந்தத் தடை உத்தரவை மிகக்கடுமையாகக் கடைப்பிடிக்குமாறு பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவினரும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் இதுதொடர்பாக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுப்பிய கடிதத்தில்,

பாராளுமன்றத்தில் கீழ்த்தளத்திலுள்ள பொதுநூலகத்தைப் பயன்படுத்துவோர் அங்குள்ள இணையங்களை பயன்படுத்தச் செல்லும்போது அங்கு "லப்ரொப்' போன்ற இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டுசெல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு நிலைமைகள் சீரான பின் இதற்கான அனுமதியளிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பங்களை மிக நன்கு பயன்படுத்தித் தாக்குதல் நடத்தும் வல்லமையை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளதால், இலத்திரனியல் கருவிகள் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது

No comments: