Tuesday, 1 July 2008

பாதுகாப்பு தொடர்பில் சார்க் நாடுகள் எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை-அரசாங்கம்

இந்தியப் படையினர் இலங்கை வருவது தொடர்பில், இந்திய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமான வேண்டுகோள்கள் எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை எனவும், இந்தியப் படையினர் பிரசன்னமாவதற்கு இலங்கை அனுமதி எதனையும் வழங்கவில்லை எனவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

சார்க் மாநாட்டின் பாதுகாப்பு தொடர்பில், எந்தவொரு நாடும் இதுவரை உத்தியோகபூர்வமான வேண்டுகோள்கள் எதனையும் விடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், எந்தவொரு வெளிநாட்டு இராணுவ அதிகாரிக்கும் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

"இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு இராணுவ அதிகாரியும் இலங்கைக்கு வந்தததாக கேள்விப்படவில்லை. அதனால் எம்மால் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்க முடியாதிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் படையினரும் சார்க் மாநாட்டிற்கு வருகைதரும் அந்நாட்டு ஜனாதிபதி ஹமீத் கர்சாயிக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு இம்மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்க மட்ட தகவல்கள் தெரிவிப்பதாகாவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைப் படையினரால் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாதிருக்கும் என்பதால், இரு நாடுகளும் தத்தமது படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்தத் தீர்மானித்திருப்பதாகவும் அந்த ஊடகம் அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

"பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு இந்திய உயர்மட்டக் குழுவினர் வருகை தந்தமைக்கான முக்கிய காரணமும் இதுவே. இந்திய கறுப்புப்பூனை படையினரும் கடற்படை அதிகாரிகளும் இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் ஆப்கானிஸ்தான் படைகளும் வரலாம்" எனவும் அந்த ஊடகம் அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இந்தியா மட்டுமன்றி எல்லா நாட்டுத் தலைவர்களும் தத்தமது பாதுகாப்புப் படையினருடனேயே இலங்கை வருவார்கள் எனவும், அது வழமையாக நடைமுறையிலுள்ள ஒரு விடயமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் இலங்கைப் பாதுகாப்புப் படையினரைக் கொண்டே செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 15 ஆவது சார்க் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே நடைபெறவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: