இலங்கை உட்பட ஏனைய நாடுகள் சில, ஐக்கிய நாடுகள் சபையை பக்கச்சார்பற்ற, சுதந்திரமான ஒரு அமைப்பாகக் கருதுவதில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அல்ஜீரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சிரேஷ்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான இராஜதந்திரியுமான லக்டார் ப்ராஹிமியே இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, உலகத்தின் பக்கச்சார்பற்ற அமைப்பு என்ற மதிப்பைக் குறைப்பதற்கு சக்திவாய்ந்த நாடுகள் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பற்றதென நீண்டகாலத்துக்குப் பார்க்கமுடியாத நிலைமை உள்ளதாக ஐ.நா. அலுவலகர்கள் தமது குழுவுக்குக் கூறியிருப்பதாக ப்ராஹிமி தெரிவித்துள்ளார்.
“ஐ.நா. குழுவினர் எங்கு சென்றாலும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் என்றே அவர்கள் கூறப்படுவார்கள். ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பான அமைப்பு என்ற கருத்து கடந்த சில காலமாக நிலவி வருகிறது. அரேபிய, முஸ்லிம் நாடுகளில் மாத்திரமன்றி, ஜெனீவா, ரோம், நைரோபி மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் இவ்வாறான கருத்து நிலவிவருகிறது” என அவர் கூறியுள்ளார்.
சக்திவாய்ந்த நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதால், தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட காலத்துக்குக் காலம் உறுப்பு நாடுகளான 192 நாடுகள் சார்பாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கருத்துத் தெரிவிக்க முடியாமல் போயுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்குத் தாக்குதல் நடத்தப்போவதாகப் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாக ப்ராஹிமி வெளியிட்டுள்ள 103 பக்க அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment