Wednesday, 16 July 2008

இலங்கை அரசாங்கம் - கடன்வாங்கிக் கல்யாணம்

இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமானது கடன் வாங்கி கல்யாணம் அரசாங்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சார்க் மாநாட்டிற்காக அரசாங்கம் செய்யும் செலவுகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து விமர்சிக்கும் வகையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பு நகரில் பல பிரதேசங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி, நீர்கொழும்பு முதல் கொழும்பு வரையுள்ள 50 பாடசாலைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.


அத்துடன் கொம்பனித் தெருவில் 60 ஆண்டுகளான வாழ்ந்து வரும் மக்களை 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சின் யுத்த திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


சார்க் மாநாடு நடைபெறும் தினங்களில் தொடரூந்து மற்றும் பேரூந்துகள் கொழுமபு வருவதை நிறுத்தி, ராஜகிரிய, பெலவத்த, நாவல, கோட்டே ஆகிய பிரதேசங்களில் கட்டிடங்களை உடைத்து, மூன்று நான்கு தினங்களுக்கு வரும் 7 அரச தலைவர்களுக்கு பாதுகாப்புக்கென அரசாங்கம் ஒன்று இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது நியாயமானதா எனவும் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.


உழைக்கும் மக்கள் 5 ஆயிரம் ரூபா ஊதிய அதிகரிப்பு கோரும் போது, அதனை வழங்க பணம் இல்லை என கூறும் அரசாங்கம், சார்க் மாநாட்டிற்காக செலவிட 2 ஆயிரத்து 880 மில்லியன் ரூபா அனுமதி கோரி நாடாளுமன்றத்தில் தகுதிகாண் மதிப்பீட்டு அறிக்கையை சமர்பித்துள்ளது.


மாநாட்டிற்கான களியாட்டு நிகழ்வுகளுக்கான 5 ஆயிரத்து 600 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று நாள் மகிழ்ச்சிக்காக இந்தளவு தொகை பொது மக்களின் பணத்தை செலவிடுவதன் மூலம் நாட்டுக்கு என்ன கிடைக்கப் போகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: