மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈ.பி.டி.பி.யினால் சில தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்ட சுரேஸ்குமார் என்ற பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிள்ளையான் குழுவினரால் நேற்றைய தினம் இரண்டு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். குறித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூரில் உள்ள ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தின் பின்பக்கமாகவுள்ள ஓரிடத்தில் இந்த உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கே புதைக்கப்பட்ட ஒருவரின் தலைப்பகுதி புதைகுழிக்கு வெளியே தெரிந்துகொண்டிருந்ததால் இது குறித்து உடனடியாக காவல்துறை மேலிடத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின் பிரகாரம் மாவட்ட நீதிபதிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிபதி முன்னிலையில் புதைகுழியை தோண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் வரை புதைகுழி தோண்டப்படவில்லை என்றும் இன்று மாலை புதைகுழி தோண்டப்படலாம் என்றும் மட்டக்களப்பு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதைகுழிக்கு வெளியே தெரியும் தலைப்பகுதி மட்டக்களப்பில் அண்மையில் கடத்தப்பட்ட ஒருவரினது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment