Thursday, 17 July 2008

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் எல்லைமீறிச் சென்றுவிட்டன- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் எல்லைமீறிச் சென்றிருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் நியமிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் முன்வைத்த யோசனைகளுக்கு எதிராக சில இலங்கை அதிகாரிகள் கருத்துக்களை வெளியிட்டிருப்பது துரதிஸ்டவசமானது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கையில் நியமிப்பதன் மூலம் அனைத்து மனித உரிமை மீறல்களையும் முடிவுக்குக் கொண்டுவரமுடியாது எனச் சுட்டிக்காட்டிய றோஸ், எனினும், இதன் மூலம் இலங்கையின் அனைத்து சமூகத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகக் காணப்படும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரமுடியும் எனக் கூறியுள்ளார்.

“உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நன்கு அனுபவம் வாய்ந்த, பயிற்றுவிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கீழ் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட, குறிப்பாக தமிழர்கள் பலவந்தமாகத் தமது பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட பகுதிகளில் இந்தக் கண்காணிப்பாளர்கள் பணிக்கு அமர்த்தப்படவேண்டும்” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட ஆலோசகர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் குழுவொன்றை நியமிப்பது குறித்து தாம் கவனம் செலுத்தியிருப்பதாகவும், இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படும் என இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்குப் பதிலளித்திருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பதென்ற தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தமைக்குப் பதிலாக, இந்த விடயத்தின் யதார்த்தம் குறித்து ஆராய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அவசரகாலச் சட்ட விதிகளுக்கு அமைய பாதுகாப்புப் படையினர் தன்னிச்சையாகக் கைதுகளை மேற்கொள்ளவும், நீதிமன்றங்களில் நிறுத்தாமல் தடுத்துவைப்பதற்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் நோக்கில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்படுவதை அமெரிக்க அரசாங்கமும், சர்வதேச சமூகமும் வரவேற்கவேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் தீர்மானமொன்றை முன்வைத்துள்ளது.

மோதலில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுவதுடன், படுகொலைகள், ஷெல் வீச்சுக்கள் இடம்பெறுவதாகவும், மனிதநேயப் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்குத் தேவையற்ற தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாச்சாரம் காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நிறுத்தி அரசியல் ரீதியான தீர்வொன்றை நோக்கிச் செல்லவேண்டுமென அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: