இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் விவகாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் மல்லொக் பிரவுண் நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரையும், மாகாண சபை உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார்.
இலங்கையில் தற்போதுள்ள மனித உரிமைகள் நிலைவரத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஏற்றுமதி வரிச்சலுகை தொடர்ந்தும் நீடிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என மல்லொக் பிரவுண் இந்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
13வது திருத்தச் சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் எனவும், மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்குமாறு தாம் மல்லொக் பிரவுணிடம் வலியுறுத்தியதாக கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவித நிதியுதவிகளும் கிடைக்கவில்லை எனவும் மல்லொக் பிரவுணிடம் மாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும், கிழக்கு மாகாணம் தற்போது அபிவிருத்திப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் மல்லொக் பிரவுணிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹேய்சும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment