Thursday, 17 July 2008

பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளர்களாகச் செயற்படத் தயார்- ஐஸ்லாந்து

இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணைப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஐஸ்லாந்து சென்றிருக்கும் சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் ஜெயசூரியவை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டிருக்கும் ஜஸ்லாந்து ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் பட்சத்தில் அனுசரணையாளர்களாகப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் ஐஸ்லாந்து இடம்பெற்றிருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள், அனுசரணையாளர்களாகப் பணியாற்றும்போதும் தொடரும் என அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைக்கு ஆதரவாக ஐஸ்லாந்து செயற்பட்டமைக்கு நன்றி தெரிவித்த ரஞ்சித் ஜெயசூரிய, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையற்ற நாடாக ஐஸ்லாந்து இணைந்துகொள்வதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து அக்கறையுடன் கேட்டறிந்துகொண்ட கிரிம்ஸன், வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெரிந்துகொண்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் தாம் பலமிழந்திருக்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் தயாராகவே இருந்துள்ளனர் என ஐஸ்லாந்து ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டிய ஜெயசூரிய, எனினும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை முழுமையாகக் கைவிடும் பட்சத்தில் இன்றே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இலங்கையுடனான நெருக்கமான உறவுநிலை குறித்து மீண்டும் மகிழ்ச்சி தெரிவித்த ஐஸ்லாந்து ஜனாதிபதி, ஐஸ்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுப்பதாகவும், சுவீடனுக்கான இலங்கைத் தூதுவரிடம் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தற்பொழுது முன்னெடுத்திருக்கும் மனிதாபிமான ரீதியான இராணுவ நடவடிக்கைகள் குறித்தும், இலங்கையின் பிந்திய நிலைவரங்கள் குறித்தும் ரஞ்சித் ஜெயசூரியா, ஐஸ்லாந்து ஜனாதிபதிக்குக் விளக்கிக் கூறியுள்ளார்.

No comments: