Thursday, 17 July 2008

அரசாங்கம், பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிப்பதற்காக, இலங்கை வங்கியிடமிருந்து 54 பில்லியன்களை மேலதிகப் பற்றாகப் பெற்றுள்ளது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தளம்பலைச் சமாளிக்கும் முகமாக, இலங்கை வங்கியிடமிருந்து 54 பில்லியன் ரூபாய்களை மேலதிகப் பற்றாகப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பணவீக்கம் 28 வீதமாக அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தப் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், அரசாங்கப் பணியாளர்களுக்குச் சம்பள உயர்வை வழங்கப் பின்னடிக்கின்ற போதும் 2.8 பில்லியன்கள் செலவில் “சார்க்” மாநாட்டை நடத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வெளிநாட்டவர்களின் இரண்டு நாள் கூத்துக்காக 60 வருடங்களாக கொழும்பு கொம்பனித் தெருவில் வசித்து வந்த பல குடும்பங்கள் ஏழு நாட்களுக்குள் அவர்களின் இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ராஜகிரிய பகுதியில் வியாபாரத் தளங்கள் உடைக்கப்பட்டதும் மனிதாபிமானமற்ற செயல் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: