Thursday, 3 July 2008

மல்லாவி, துணுக்காய் பகுதிகளில் எறிகணைத் தாக்குதல்கள்: ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்வு

மாங்குளம் நகருக்கு அப்பாலுள்ள மல்லாவி, துணுக்காய் பகுதிகளில் இடம்பெறும் எறிகணைத் தாக்குதல்களால் பலர் இடம்பெயர்ந்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் எறிகணைத் தாக்குதல்களால் பலர் இடம்பெயர்ந்திருப்பதுடன், அந்தப் பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உடனடியாக இடம்பெயரும் அச்சம் தோன்றியிருப்பதாகவும் எமில்டா சுகுமார், பி.பி.சி.க்குக் கூறினார்.

துணுக்காய் பிரதேச செயலாளர் அலுவலகத்தை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் இடம்பெறும் எறிகணைத் தாக்குதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் சென்றிருப்பதாகவும், குறிப்பாக கிளிநொச்சி, மாங்குளம், முறிகண்டி ஆகிய பகுதிகளை நோக்கி அவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெறத் தொடங்கியவுடனேயே மக்கள் வெளியேற ஆரம்பித்ததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லையென அவர் கூறியுள்ளார்.

துணுக்காய் பிரதேச செயலாளர் நாகலிங்கம் நந்தகுமார் கடந்தவாரம் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அந்தப் பகுதியிலிருந்து இடம்பெயரும் மக்களையும் கண்காணிக்குமாறு மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

எனினும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவு மக்களையும் சேர்த்துக் கண்காணிப்பது கடினமான காரியம் எனவும், ஒரு வாரங்களுக்கு மாத்திரம் இரண்டு பகுதிகளையும் கண்காணிக்க முடியுமெனவும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் தன்னிடம் கூறியதாக, எமில்டா சுகுமார் பி.பி.சி. செய்திச்சேவைக்குக் கூறியிருந்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேறிய 35 பொதுமக்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் உதவிகோரியிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.

No comments: