Wednesday, 2 July 2008

கிழக்கு மாகாணத்தில் ஈ பி டி பிக்கும் பிள்ளையான் குழுவுக்கும் இணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி முயற்சி

கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையுடன் இணைந்து செயற்பட்டு வரும் பிள்ளையானை அழிப்பதற்கு முன்னாள் துணைப்படைத் தலைவரான கருணா முயற்சித்து வருகின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைப் புரிந்து பிள்ளையானை அழிக்கப்பேவதாக கருணா தெரிவித்துள்ளார் என்று கிழக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவின் குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக அங்குள்ள தடுப்பு முகாமில் கருணா தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கில் நடைபெற்ற தேர்தலை கருணா எதிர்த்ததுடன், பிள்ளையானை அதில் போட்டியிட வேண்டாம் என்றும் கருணா தெரிவித்ததாக அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

எனினும் பிள்ளையானை மகிந்த தன்னுடன் இணைத்துக்கொண்டது கருணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே கிழக்கில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கிழக்கில் படையினர் பாதுகாப்புக்களைப் பலப்படுத்தி வருகின்றனர்.

கிழக்கில் தனியார்துறையைச் சேர்ந்த எல்லா பணியாளர்களும், பொதுமக்களும் குற்றப்புலனாய்வுத்துறையினாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்லா மக்களையும் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகள் செய்து வருவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே எதிர்வரும் மூன்று மாதங்களில் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலினை கிழக்கில் நடத்தலாம் என்று பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களும் தெரிவித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஈ பி டி பிக்கும் பிள்ளையான் குழுவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். ஈ பி டி பியும் பிள்ளையான் குழுவும் அண்மையில் கிழக்கில் தமக்கிடையில் முரண்பாடுகளை வளர்த்து வந்துள்ளன.
இதன் ஒரு உச்சகட்டமாக இரண்டு தரப்பினரும் அண்மைக் காலத்தில் ஆட்கடத்தல்களிலும் ஈடுபட்டனர்.

அத்துடன் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஈ பி டி பி உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலைகளிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு ஈ பி டி பியின் நான்கு உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் பிள்ளையான் குழு தமக்கெதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டு ஈ பி டி பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தமக்கு ஆதரவாகச் செயற்படும் இந்த இரண்டு குழுக்களையும் வைத்துக்கொண்டு கிழக்கில் இயங்குவதைச் சாதகமாகக் கருதுகிறது.

எனவே இரண்டு தரப்புக்கும் இடையில் இந்த வாரம் ஜனாதிபதியின் தலைமையில் இணக்கப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை திரும்பியதும் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: