Wednesday, 2 July 2008

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஊடாகவே சிறந்த தீர்வை முன்வைக்கலாம்- அமைச்சர் திஸ்ஸ வித்தாரண

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாகவே இலங்கையில் தொடர்ந்துவரும் இனப்பிரச்சினைக்கு சிறந்ததொரு இறுதித் தீர்வை முன்வைக்க முடியுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சருமான, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு இதுவரை 70 தடவைகள் கூடி ஆராய்ந்துள்ளபோதும், இரண்டு அடிப்படை விடயங்களில் உறுப்பினர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவருவதாகவும் கூறினார்.

அதிகாரப்பகிர்வு இதில் ஒரு அங்கமாக உள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், மாகாணசபைகளுக்குக் கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட்டால் அது தனிநாட்டுப் பிரேரணைக்கு அதிகாரம் வழங்கியதாக அமைந்துவிடுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு சாரார் அஞ்சுவதாகக் கூறியுள்ளார். ஒரு முறை அதிகாரங்கள் பகிரப்பட்டால் பின்னர், அரசாங்கம் அதிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென அச்சம் வெளியிடப்பட்டிருப்பதால், அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயம் மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டியுள்ளது என அமைச்சர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றப்பட்டு, ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறைக்கு அமைய நாட்டின் தலைவராக பிரதமரை நியமிக்கும் முறை ஏற்படுத்தப்படவேண்டுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் பிரதிநிதிகள் சிலர் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் இணைந்துகொள்ளுமாறு ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” எனக் குறிப்பிட்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண, தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்ற நம்பிக்கையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தமிழர்களுக்கு ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக தீர்வொன்றை எட்டுவது காலத்தைக் கடத்தும் செயலென சபைமுதல்வர், அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

எனினும், அமைச்சரின் இந்தக் கருத்துத் தொடர்பாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்மட்டக் குழுவினர், இலங்கை இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகவே தீர்க்கப்படவேண்டுமெனவும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக விரைவில் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படவேண்டுமெனவும் இலங்கை உயர்மட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

No comments: