Sunday, 20 July 2008

“சார்க்”மாநாட்டை குழப்பப்போவதில்லை என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பு, இலங்கை அரசாங்கத்திற்கு இராஜதந்திர பின்னடைவாகும்

“சார்க்” மாநாட்டைத் தமிழீழ விடுதலைப் புலிகள் குழப்புவார்கள் என்ற பிரசாரத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் பாரிய பாதுகாப்பு முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் “சார்க்:” மாநாட்டைத் தாம் குழப்பப் போவதில்லை எனத் தமீழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி இலங்கையில் இருந்து வெளிவரும் “சண்டே லீடர்” செய்தித் தாளில் வெளியாகியுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் போராட்டத்திற்குப் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்ற அடிப்படையில் அதற்கான அவசியம் இல்லை என நடேசன் குறிப்பிட்டுள்ளார். நடேசனின் இந்தக் கருத்து இலங்கை அரசாங்கத் தரப்பில் எதிர்ப்பார்க்கப்படாத ஒன்று என்றே தெரிவிக்கப்படுகிறது.


ஏனெனில் “சார்க்” மாநாட்டின் போது சிறிய சம்பவம் ஒன்றைக் கூடப் பெரிதுபடுத்தி அதன்மூலம், இந்தியாவினதும் பிராந்திய நாடுகளினதும் எதிர்ப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது திசைதிருப்பும் திட்டம் ஒன்று குறித்து இலங்கைத் தரப்பு முனைப்புக் காட்டி வருகின்ற நிலையிலேயே நடேசனின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.


ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன, இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை, அதே இந்தியாவுடன் மோதவிட்ட சந்தர்ப்பத்தைத் தமது அரசியல் தந்திரம் மூலம் ஏற்படுத்தியிருந்தார்.


இவ்வாறான ஒரு தந்திரத்தைத் தற்போதைய ஜனாதிபதியும் எதிர்ப்பார்த்துத் தமது அரசியல் நகர்வை, மேற்கொண்டு வருகிறார்.


இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டுள்ள நடேசனின் கருத்து, இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு இராஜதந்திர ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடை எனக் கொழும்பின் அரசாங்க உயர்தரப்புக் கருதுகிறது.

இதேவேளை, பொதுமக்கள் அவர்களின் பிரதேசங்களில் இருந்து பாரிய தாக்குதல்களின் மூலம் வெளியேற்றிவிட்டு அவற்றைக் கைப்பற்றிவிட்டதாக அரசாங்கம் கூறிவருகிறது.


இது இலங்கை அரசாங்கத்தின் போர் வெற்றி தொடர்பான மனோநிலையை வெளிக்கொணர்ந்து நிற்கிறது என்றும் நடேசன் இந்த ஆங்கில செய்தித் தாளுடனான செவ்வியில் தெரிவித்துள்ளார்.


தமீழீழ விடுதலைப் புலிகள் மரபுரீதியான போராற்றலை இழந்துவிட்டதாக இலங்கையின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாகத் தமது செவ்வியில் பதிலளித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள் களநிலைமைக்கேற்பத் தமது இராணுவத் தந்திரோபாயங்களை மாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


அரசியல்வாதிகளுடன் இணைந்து இராணுவ உயரதிகாரிகள் இவ்வாறான கருத்துக்களைக் கூறி உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


தென்னிலங்கையில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நடேசன், தமது புலனாய்வுத் தகவல்களின்படி, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் மேவின் சில்வா உட்பட்டவர்களும் இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments: