வடக்கில் இலுப்பைக்கடவை நகரத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
நேற்றிரவு மன்னார், விடத்தல்தீவுக்கு வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இலுப்பைக்கடவை நகரை நோக்கி படையினர் முன்னேறியதாகவும், இன்று காலை நகருக்குள் படையினர் நுழைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வெற்றியின் மூலம், வடக்கில் விடுதலைப் புலிகளிடமிருந்து மற்றுமொரு மிகப் பெரிய நகரம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தளமாக இந்நகரம் விளங்கியதாகவும், ஆனால் கடற்புலிகள் இங்கு நிலைகொண்டிருக்கவில்லை எனவும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 48 மணி நேரத்தில் நடைபெற்ற மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தவித கருத்துக்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

No comments:
Post a Comment