Friday, 25 July 2008

கறுப்பு ஜூலையை தமிழர்கள் மன்னித்தாலும் மறந்துவிடமாட்டார்கள் - மனோகணேசன் எம்.பி!

83 கறுப்பு ஜூலை நிகழ்வுகளை தமிழ்மக்கள் மன்னித்தாலும் ஒருபோதும் மறந்துவிடப் போவதில்லை. இதனை சிங்கள அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும்,

மேலக மக்கள் முன்னணித் தலைவருமான மனோகணேசன் இந்த நாட்டின் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைக்கு தீர்வுகாண முற்படாமல் மொழிப் பிரச்சினையை ஒப்பனைக்கு காட்ட அரசு முற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

தமிழினம் இன்று எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையானது மொழியைக் காரணம் காட்டி மூடிமறைக்க முற்படக்கூடாது. இதிலிருந்து இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வைத் தர சிங்கள அரசியல் தலைமைகள் தயாராக இல்லையென்பது தெளிவாகக் காணப்படுவதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டினார்.

கறுப்பு ஜூலையை நினைவுகூருமுகமாக தேசிய சமாதானப் பேரவை அதன் தலைமைச் செயலகத்தில் நடத்திய "கட்டியெழுப்பப்படாத பாலங்கள்' எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய சமாதான செயலகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

தமிழ் மக்களின் மனநிலை அவர்களின் கஷ்டங்கள் பற்றி சிங்கள மக்களுக்கு அவர்களுக்குப் புரிகின்ற பாஷையிலேயே சொல்ல வேண்டுமென்பதால் இங்கு நான் சிங்கள மொழியிலேயே பேசவிரும்புகின்றேன். தமிழ்பேசும் மக்களின் மன உணர்வுகளை சிங்கள அரசியல் தலைமைகளும், தென்னிலங்கை சிங்கள மக்களின் பெரும் பகுதியினரும் இன்னமும் புரிந்துகொள்ளவில்லையா அல்லது புரிந்துகொண்டாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லையா என்று கேட்க வேண்டியுள்ளது.

யதார்த்தத்தை புரிந்துகொண்டு தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் தூய எண்ணம் சிங்கள சமூகத்திடம் வரும் வரை இந்த இருளிலிருந்து நாடு மீளவே முடியாது போகலாம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

25 வருடங்களுக்கு முன்னர் 1983 இல் ஆடி மாதம் வைக்கப்பட்ட தீ இன்னமும் எங்கள் நெஞ்சங்களில் கனன்று எரிந்து கொண்டிருக்கின்றது. அன்றைய அட்டூழியங்களின் பேரினவாத பின்னணி அப்படியே இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றது. அன்றைய நிகழ்வுகளை தமிழ் மக்கள் மன்னித்து விட்டாலும் மறந்துவிடப் போவதில்லை என்பதை சிங்கள அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று ஆடி கலவரத்தின் போது கொழும்பு ஹவ்லொக் நகரில் அமைந்திருந்த எங்களது வீடு சூறையாடப்பட்டது. எங்களது உடைமைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நாங்கள் எங்களது வீட்டை விட்டு வெளியேறி இருந்தோம். நாங்கள் தப்பிச் செல்வதற்கு எனது தந்தையின் நண்பர் மறைந்த விஜயகுமாரதுங்க மூலமாக பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் யசபாலித நாணயக்கார உதவி புரிந்திருந்தார்.

இத்தகைய சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் அன்று நடைபெற்றன. கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தமிழர்களின் சொத்துக்கள் அன்று சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. பெருந்தொகையான அப்பாவி தமிழர்கள் தங்களது இன்னுயிர்களை இழந்தார்கள்.

இவை அனைத்திற்கும் பின்னணியாக அன்றைய ஜனாதிபதியின் தலைமையில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. அந்த அரச பயங்கரவாதத்தின் பழிவாங்கும் கொடூர சிந்தனையின் காரணமாகவே தமிழர்கள் கறுப்பு ஜூலைக்கு முகம்கொடுத்தார்கள். அன்று நிகழ்ந்த அதே அரச பயங்கரவாதம் இன்றும் படுமோசமாக தலைவிரித்தாடுகின்றது. நாங்கள் இரண்டையுமே கண்டிக்கின்றோம். ஏனென்றால் இந்த இரண்டு அரச பயங்கரவாதங்களின் மூலமாகவும் துன்பங்களை சந்தித்தவர்கள் நாங்கள் தான்.

அதேபோல அன்றைய 1983 இன்றைய 2008 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இன்னொரு முறையும் 1989 இல் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. அதன்போது அப்பாவி சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் காணாமல் போனார்கள். அதையும் நாம் கண்டிக்கின்றோம்.

இங்கே உரையாற்றிய சமாதான செயலகத்தின் செயலாளர் நாயகம் இறைய அரசாங்கத்தை விமர்சிக்காமல் அன்றைய 1983 இல் ஆட்சி புரிந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் பெயர் சொல்லி விமர்சித்தார். இத்தகைய நிலைபாட்டை நாம் ஏற்றுக் கொள்ள தயாரில்லை. இது ஐக்கிய இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்கின்றது. ஒட்டு மொத்தமான அரச பயங்கரவாதங்களையும் அரச சார்பற்ற பயங்கரவாதங்களையும் நாங்கள் கண்டிக்கின்றோம்.

இன்று ஆயுதப் போராட்டம் நடத்தும் புலிகளும் சரி ஆயுதம் தூக்கி போராடிய புளொட், ரெலொ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இயக்கங்களும் சரி தென்னிலங்கையில் ஆயுதம் தூக்கிய ஜே.வி.பி.யும் சரி வானத்திலிருந்து திடீரென பூமிக்குக் குதித்து விடவில்லை. 1940களிலிருந்து நாட்டை மாறி மாறி ஆண்டுவந்த அரசுகளின் அரச பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாகவே இத்தகைய அனைத்து வன்முறை இயக்கங்களும் உருவாக்கப்பட்டன. என்ற அடிப்படை உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படை உண்மைகளை இங்கே குழுமி உள்ள சிங்கள நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுவரையில் ஆடி கலவரத்தின் வடுக்களை எம்மால் மறக்க முடியாது. மீண்டும் ஒரு முறை இத்தகைய கலவரங்கள் நடைபெறுவதை எம்மால் தடுக்கவும் முடியாமல் போய்விடலாம்.

No comments: