இலங்கையின் வடக்கே இடம்பெற்றுவரும் மோதல்களின் காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 400 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் முகாமில் ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசாங்கம் தடுத்துவைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்த நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் இவ்வாறு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து அச்சம்காரணமாக வெளியேறும் பொதுமக்களை மன்னார் மாவட்டத்திலுள்ள களிமோட்டை நலன்புரி முகாம் என்றழைக்கப்படும் இடத்தில் அரசாங்கம் தடுத்துவைத்திருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன், இம்முகாமில் தங்கியிருப்பவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு பாதுகாப்புப் படையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தினசரி அனுமதி வழங்கும் (பாஸ்) நடைமுறையொன்றைப் பயன்படுத்தி ஒரு நாளில் 30 பேர் மாத்திரமே முகாமை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், அவர்கள் மாலையில் திரும்பி வருவார்கள் என்பதை அவர்களது குடும்பத்தவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எதுவித குற்றச்சாட்டுக்களோ அல்லது நீதிமன்றத்தின் அனுமதியோ இன்றி இவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறும் செயல் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோதல்களினால் அச்சமடைந்து இடம்பெயர்ந்துள்ள இம்மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2008 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கையின் காரணமாக அப்பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு இடம்பெயர்வோர் அனைவரும் தமிழர்களே எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடைகளின் காரணமாக அங்கிருந்து சுமார் 107,000 பேர் வெளியேறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளனர்.
"விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் தத்தமது கட்டுப்பாட்டுப்பகுதிகளில் உள்ள மக்களுக்கான பாதுகாப்பை அளிப்பதில் மிகக் குறைவான அடைவுகளையே வெளிப்படுத்தியுள்ளனர்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment