இலங்கை மத்திய வங்கி ஒரு நடுநிலையான நிறுவனமாகச் செயற்படுகிறது என தாம் நம்பவில்லை என இலங்கையின் பிரபல வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி சஞ்சிகை நடாத்திய கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி அரசியல் தலையீடுகளின்றி சுதந்திரமாக செயற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
"மத்திய வங்கியின் ஆளுநர் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர். அத்துடன் மத்திய வங்கியின் செயற்பாடுகள் அனைத்தும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் நலன்களுக்கு சார்பாகவே அமைந்திருக்கின்றன" என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றியோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மத்திய வங்கி நீதியாகச் செயற்படுவதில்லை எனக் கருத்துவெளியிட்டிருக்கும் பெரும்பாலானோர், அரசாங்கத்தின் தலையீட்டினால் மத்திய வங்கியின் சேவைகள் மிகவும் குறைவாகவே கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றியோரில் மூன்றில் இரண்டு பங்கினர், இலங்கை மத்திய வங்கி ஒரு நவீனகால நிறுவனம் எனக்குறிப்பிட்டிருக்கின்ற அதேநேரம், நாட்டின் பிரதான பொருளாதார அதிகாரமிக்க மத்திய வங்கியானது நாட்டின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தனது சேவைகள் தொடர்பில் மத்திய வங்கி அதிகம் மக்களை விழிப்பணர்வூட்ட வேண்டும் எனவும், ஏனைய வங்கிகள், நிதி நிறுவனங்கள், என்பவற்றுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் வணிக முயற்சிகளுக்குத் தேவையான உதவிகளையும் மத்திய வங்கி வழங்கவேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:
Post a Comment