Thursday, 3 July 2008

இலங்கை இனப்பிரச்சினையால் 250,000ற்கும் அதிகமானவர்கள் பலி- குமார் ரூபசிங்க

இலங்கையில் தொடரும் உள்நாட்டு மோதலால் 80 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகின்றபோதும், பிந்திய கணக்கெடுப்புக்களின்படி 250,000ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என சகவாழ்வுக்கான மன்றத்தின் தலைவர் கலாநிதி குமார் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ரூபசிங்க, உலகவில் 32 உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இதில் 16 மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதுடன், எட்டு மோதல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார். பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவரும் 8 மோதல்களில் இரண்டைத் தீர்த்துவைப்பதற்கான சூழ்நிலை தோன்றியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இலங்கையின் இனப்பிரச்சினை முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு மோதல்கள் சராசரியாக 30 வருடங்கள் மாத்திரமே தொடரும் எனவும், இலங்கையில் 25 வருடங்கள் மோதல் தொடர்ந்துள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் வெற்றிபெறமுடியாத கட்டத்தில் இருப்பதாகவும் குமார் ரூபசிங்க கூறினார்.

அத்துடன், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையிலுள்ள எட்டு முன்னணி அரசாங்க நிறுவனங்களில் தமிழ் மொழியில் தகவல்களை வழங்குவதற்கு ஒருவர்கூட இல்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது என சகவாழ்வுக்கான மன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார். நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அங்கு பணிபுரியும் 450 பேரில் மூவர் மாத்திரமே தமிழ் மொழியில் பேசக்கூடியவர்கள் என்பது கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மோதலைப் பொறுத்தவரையில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கு முன்னர் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும், மனிதாபிமானச் சட்டத்துக்கு அமைய ஒப்பந்தமொன்றில் இரண்டு தரப்பும் கைச்சாத்திடவேண்டுமெனவும் குமார் ரூபசிங்க குறிப்பிட்டார்.

‘முன்னெச்சரிக்கை’, ‘ஜனநாயகம்’ ‘அபிவிருத்தியும் மோதல்களும்’ ‘முரண்பாட்டுக்கான தீர்வும் மாற்றங்களும் பாகம் 1,2’ உட்பட குமார் ரூபசிங்கவால் எழுதப்பட்ட 9 புத்தகங்கள் கடந்த புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

No comments: