Thursday, 3 July 2008

”இராணுவ உதவி குறித்ததே இந்திய உயர்மட்ட குழு விஜயம்” TNA எம்.பி. துரைரட்ண சிங்கம்

”இந்திய உயர்மட்ட குழு இராணுவ உதவிகள் குறித்து பேசுவதற்கு திடீர் விஜயம் செய்திருந்தது என்று வெளியாகியிருக்கும் செய்தியை மறுப்பதற்கில்லை. ஏனெனில், இச்செய்தியை வெளியிட்டிருக்கும் பழநெடுமாறன் எம்மைவிட இந்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர்.

இலங்கை தமிழ் மக்களின் நலனில் மிகுந்த அக்கறையுள்ளவருமாவார்” என திருமலை மாவட்ட த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ண சிங்கம் தெரிவித்தார்.

இலங்கைக்கு திடீர் விஜயம் செய்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவின் விஜயம் இராணுவ உதவிகள் குறித்து பேசுவதற்கே என்றும் இதற்கெதிராக தமிழக கட்சிகள் ஒன்று திரள வேண்டுமென்றும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பழநெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பாக கருத்து கூறும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் இது பற்றி தெரிவிக்கையில்: ”இந்திய உயர்மட்டக் குழுவின் விஜயம் பல நோக்கங்களைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. இதில் முக்கியமாக இலங்கையில் நடைபெறவுள்ள “சார்க்” மாநாட்டிற்கு இந்திய பிரதமரின் விஜயம் தொடர்பான விடயத்தை குறிப்பிட முடியும்.

அவ்வாறே இலங்கையின் நெருக்கடிகள் தொடர்பாகவும் பேச்சுக்கள் இடம்பெற்றன. எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் மத்தியில் இந்திய அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் உயர்மட்டக் குழுவின் விஜயம் குறித்தும் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.

இந்நிலையில் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இந்தியர்களின் கருத்துக்களையும், வேண்டுகொள்களையும் உதாசீனம் செய்ய முடியாது. ஏனெனில், எம்மைவிட இந்திய அரசுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்கள் அவர்களே” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: