Thursday, 3 July 2008

ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்தக்கோரி தினமும் பல மின்னஞ்சல்கள்- ஜீ.எல்.பீரிஸ்

இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகையை (ஜீ.எஸ்.பி.பிளஸ்) மேலும் நீடிக்கவேண்டாமெனக் கோரி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையத்துக்கு நாளாந்தம் பெருமளவான மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக சர்வதேச வர்த்தக மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கான விண்ணப்பங்களை ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் கோராதநிலையில், இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகையை நீடிக்கக்கூடாது என மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கு நாடுகள் கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாத இறுதியிலேயே விண்ணப்பப் படிவங்களை வெளியிடும் எனவும், அதன் பின்னரே ஏற்றுமதி வரிச்சலுகையை நீடிப்பதற்கு இலங்கை விண்ணப்பிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகையை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முட்டாள்தனமானவை எனவும், இதனால் அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என்பதுடன், அப்பாவி கிராமப் பகுதி மக்களே வேலைவாய்ப்புக்களை இழப்பார்கள் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் நீடிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, இலங்கையின் பிந்திய நிலைமைகள் பற்றி ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தை நிறுத்துவதற்கே வேலைநிறுத்தப் போராட்டம்- அநுர பிரியதர்ஷன யாப்பா

வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கிலேயே எதிர்வரும் 10ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளங்களை கட்டம் கட்டமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இந்த மாதத்துடன் மேலும் ஆயிரம் ரூபாவால் அரச ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கவிருப்பதாகவும் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார். இவ்வாறான நிலையில் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 10ஆம் திகதி வேலைக்கு சமுகமளிக்கும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், ஊடகவியலாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மகேந்திர ரட்ணவீர ஆகியோர் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேலும் தெரிவித்தார்.

No comments: