Thursday, 3 July 2008

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: அரசியல் தஞ்சம்கோரும் திட்டமாம்- கெஹலிய ரம்புக்வெல

ஊடகவியலாளர்கள் உட்பட சிலர் அரசியல் தஞ்சம்கோரி நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக தம்மீது தாமே தாக்குதல்கள் நடத்துவதாக அரசாங்கத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது என பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிநாட்டுக்குச் செல்வதற்கு விண்ணப்பித்திருக்கும் ஊடவியலாளர்கள் தொடர்பான பெயர்களும், விபரங்களும் அரசாங்கத்துக்குக் கிடைத்திருப்பதாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறியுள்ளார்.

'நேஷன்' பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நொயர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட பின்னரே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என ஊடகவியலாளர்கள் கூறியமைக்குப் பதிலளித்த அமைச்சர், நொயரின் விடயம் அவ்வாறு இல்லையெனவும், வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.


கீத் நொயர் மீதான தாக்குதல்கள் போன்றவற்றின் விசாரணைகளை அவசர அவசரமாக நடத்தி முடிக்க இயலாது எனவும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை மாத்திரம்கொண்டு விசாரணைகளைத் துரிதமாக மேற்கொள்வது இலகுவானதல்ல எனவும் அமைச்சர் கூறினார்.


இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவல் மற்றும் அரசியல் பிரிவு அதிகாரியான மகேந்திர ரட்னவீர ஆகியோர், போலியான இலக்கத் தகட்டைக்கொண்ட வாகனத்தில் வந்தவர்களாலேயே தாக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

உலகத்தில் பாதுகாப்பு நிறைந்த எந்தவொரு பகுதியிலும் இவ்வாறான தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குற்றச் செயல்கள் குறித்த சில தடயங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர்களைத் தாக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் வெளியிட்டிருந்த தகவல்கள் குறித்து, ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு கவனம் செலுத்தியுள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.

No comments: