Saturday, 5 July 2008

சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம்

இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம் இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சம நிலையற்றுக் காணப்படுவதே என ஒக்ஸ் போர்ட்டை மையமாகக் கொண்டியங்கும் இன நெருக்கடி மற்றும் மனித விவகாரங்களுக்கான மத்திய ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் ஹியூமன் ரைற்ஸ் ரிபியூன் என்ற இணைத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான அதிகாரங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே சமநிலையற்றுக் காணப்படுவதே பிரதான காரணமாக அமைகின்றது.

இலங்கை அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கலாச்சாரம் உட்பட ஏனைய விடயங்களிலும் சமநிலையற்றுக் காணப்படுகின்றது. இங்கே அரசியல் அதிகாரங்கள் ஒரு பிரிவான சிங்களவர்களிடம் குவிந்து காணப்படுகின்றன. மற்றொரு பிரிவான தமிழர்களிடம் அதிகாரங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. அரசியல் அதிகாரங்களில் சமநிலை என்பது மிக முக்கியமான விடயம்.

பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் அதிகாரப் பகிர்வு மிகவும் இன்றியமையாத ஒன்று. இதனைச் சரிவரப் புரிந்துகொள்ளாது அனைத்துலக சமூகம் புறக்கணித்துள்ளது. பல்லின மக்கள் வாழும் ஓர் நாட்டில், அனைத்து இன மக்களுக்கும் சரியான முறையில் உரிமைகள் பகிரப்பட வேண்டும். அது சரிவரக் பகிரப்படாவிட்டால் அந்த நிலைமை ஜனநாயகத்தின் மீதான முதல் எதிரியாக மாறிவிடும்.

அதிகாரப் பகிர்வு இல்லாதவிடத்து அங்கு முரண்பாட்டுக்கு வித்திடுவது இன்றியமையாதது. இனத்துவ அடையாளங்களில் சமநிலையில் பேணுவதில் ஏற்படும் குறைபாடுகள் இலங்கை இனப்பிரச்சினைக்கு மூலகாரணகளாக உள்ளன.

தமிழ் மக்களின் கலாச்சாரத் தனித்துவங்களைப் பேணுவதற்கு இலங்கை அரசாங்கங்கள் எவ்வித முனைப்பும் காட்டவில்லை. கல்வி, தொழில்துறை, பொருளாதார நிலைமை போன்றவற்றில் தமிழர்களுக்கு உரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப்படுவதன் ஊடாக பிரச்சினைக்கான தீர்வை இலகுவாக அணுக முடியும் என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: