தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் போருக்கு ஆதரவாக மிகவும் கூடுதலான அளவுக்கு ஆக்ரோஷமாக பேசுகின்ற அரசியல் வாதியென்றால் அது விமல்வீரவன்சவைத் தவிர வேறு எவருமாக இருக்க முடியாது.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் பிரசாரச் செயலாளராகவும் இருந்த வீரவன்ச, அக்கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்டு இப்போது தேசிய சுதந்திர முன்னணி (ஜே.என்.பி.) என்ற புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.
ஜே.வி.பி.யில் இருந்த போது போருக்கு ஆதரவாகப் பேசியதையும் விட தற்போது அவர் கூடுதலாகப் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வன்னியில் போரைத் தீவிரப்படுத்தியிருப்பதன் காரணத்தினால் தான் முன்னென்றுமில்லாத படுமோசமான பொருளாதார நெருக்கடியை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் போரை நிறுத்தினால் அரசாங்கம் வீழ்ச்சி கண்டு விடும் என்றும் வீரவன்ச தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக ஜே.வி.பி.யை இழுத்துக் கொண்டு சென்றவர் வீரவன்ச என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
இராணுவ நடவடிக்கைகளுக்கு இடையூறை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக மக்களைப் பாதிக்கின்ற பொருளாதார நெருக்கடி உட்பட எண்ணற்ற பிரச்சினைகளில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துவதைத் தவிர்த்து வந்ததன் விளைவாக மக்களிடமிருந்து தாங்கள் அந்நியப் பட்டுப் போயிருப்பதை ஜே.வி.பி.யின் தலைவர்கள் இப்போது உணர ஆரம்பித்து விட்டார்கள்.
இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வைப் பொறுத்த வரை ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டில் ஆரோக்கியமான மாறுதல் ஏற்படுமென்று நாம் எதிர்பார்க்கவில்லையென்ற போதிலும் போரைப் பயன்படுத்தி ஏனைய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வஞ்சகத்தனமான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடுகின்றது என்பதை ஜே.வி.பி தலைவர்கள் இப்போது பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அரசாங்கத்தின் அந்த வஞ்சகத்தனத்துக்கு இதுகாலவரை தாங்களும் கணிசமான அளவுக்கு துணைபோயிருக்கின்றனர் என்பதை ஜே.வி.பி.யினர் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசாங்கத்துக்கு எதிராக பல போராட்டங்களை நடத்துவதற்கு ஜே.வி.பி.இப்போது தயாராகிறது. அக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் துறைத் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை ஒருநாள் பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.
இந்த வேலை நிறுத்த அழைப்பு வன்னியில் படையினரின் நடவடிக்கைகளினால் பெரும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கும் விடுதலைப்புலிகளுக்கு உதவக்கூடியது என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவான அரசியல் சக்திகளிடமிருந்து வந்திருக்கிறது.
மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்துவருகின்ற அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக அமைப்புகளையும் விடுதலைப்புலிகளின் கையாட்கள் என்று வர்ணித்துப் பழக்கப்பட்டுவிட்ட ஜே.வி.பி.யினர்,
இப்போது அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தத்தயாராகும் போது, அதே வசைமாரிகளை தாங்களும் கேட்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறுயாருமல்ல முன்னைய தோழர் விமல் வீரவன்சவே ஜே.வி.பி.யினர் இப்போது விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்காளிகளாக ஜே.வி.பி.தலைவர்கள் மாறிவிட்டார்கள் என்றும் வீரவன்ச கூறுகிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமுகமாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவவில்லை என்று கூறுகிறார்.
இன்று நாடு பல முனைகளிலும் நெருக்கடிகளை எதிர்நோக்கிய வண்ணமிருக்கிறது. அரசாங்கத்தினால் எந்தவொரு நெருக்கடியையும் தணிக்க முடியவில்லை. அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் மத்தியில் தோன்றியிருக்கும் அதிருப்தியை உருப்படியான முறையில் அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜன இயக்கமாக மாற்றக்கூடிய அரசியல் துணிச்சலும் விவேகமும் எதிரணியிடம் இல்லை.
அரசாங்கத்துக்கு எதிரான மற்றைய எதிர்க்கட்சிகளின் முன்னைய போராட்ட முயற்சிகளை விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் என்று ஜே.வி.யி.யின் தலைவர்களே குற்றஞ்சாட்டியதை இன்றைய சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
போரைப் பயன்படுத்தி ஏனைய பிரச்சினைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு புலிப்பூச்சாண்டி தந்திரோபாயத்தை பயன்படுத்திய ஜே.வி.பி.யினரை நோக்கி அதே தந்திரோபாயம் பாய்கின்ற விசித்திரத்தைக் காண்கிறோம்.
தினக்குரல்
Saturday, 5 July 2008
புலிப் பூச்சாண்டி!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment