Wednesday, 23 July 2008

கொம்பனித்தெரு வீடுடைப்பு விவகாரம்: மனுதாரர் தரப்புச் சட்டத்தரணியைக் கடத்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளைவானாம்!

சார்க்' மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில் கொழும்பு கொம்பனி வீதியில் பல நூற்றுக்கணக்கான வீடுகளை இடித்துத் தகர்க்க எடுக்கப்பட்ட அரசின் முயற்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த வழக்கின் மனுதாரர்கள் சார்பில்...

ஆஜரான சட்டத்தரணியைக் கடத்திச் செல்வதற்கு கொழும்பு ஹல்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்துக்கே வெள்ளைவான் ஒன்று வந்திருப்பதாக நேற்று நீதிமன்றில் சுட்டிக் காட்டப்பட்டது.

இதையடுத்து இப்பிரச்சினை குறித்து விரிவாக விசாரணை நடத்தி விளக்க அறிக்கை ஒன்றை நாளை (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் டபிள்யூ. தயாரத்னவுக்கு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மேற்படி வீடு தகர்ப்பு முயற்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம் அந்த வீடுகளைத் தகர்ப்பதற்கு எதிராகத் தடையுத்தரவும் விதித்திருந்தது.

எனினும், இந்தத் தடை உத்தரவு தமக்கு எழுத்தில் கிடைக்கவில்லை என்ற விளக்கத்தை வைத்துக்கொண்டு அந்த வீடுகளின் உரிமையாளர்கள் கதறிக் கதறி அழவும், தடுக்கவும் அவற்றையும் கவனிக்காமல், கணிசமான வீடுகளைக் கடந்த வெள்ளியன்று அரச தரப்பு இடித்துத் தரைமட்டமாக்கியது என்பது தெரிந்ததே.

நேற்று இந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஷிராணி திலகவர்த்தன, அன்ட்ரூ சோமவன்ஸ, கே.ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான நெத்ஸ்ரீ பரணவிதாரண குறித்து நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

வீடுடைப்பு நடவடிக்கைக்கு எதிராகக் கடந்த வெள்ளியன்று நீதிமன்றம் விடுத்த தடை உத்தரவை, வீடுடைப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கச்சென்று அங்கு களேபரத்தை எதிர்கொண்ட இவரை, இப்போது கடத்திச் செல்வதற்காக நீதிமன்ற வளாகத்திற்கு வெள்ளை வான் ஒன்று வந்திருப்பதாக நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இவ்விடயம் குறித்து விசாரித்து விரிவான விவரமான அறிக்கையொன்றை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கும்படி சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நாளை வழக்கின் எதிர்மனுதாரர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் விடுத்துள்ள தடை உத்தரவு நீக்கப்படும்வரை மேற்படி வீடுகள் எதையும் இடித்துத் தகர்த்துத் தரைமட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதென அரசுத் தரப்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் பாரித ரணசிங்க நீதிமன்றில் வாக்குறுதி அளித்தார்.

No comments: