இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து குரல்கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டேவிட் க்ளேட்ஸ்டோன், ஆனால் மஹிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்றபின்னர் நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பிரித்தானிய இராஜதந்திரியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான டேவிட் க்ளேட்ஸ்டோன், இலங்கையில் தான் பணியாற்றிய காலப்பகுதி தொடர்பாக எழுதிக் கொண்டிருக்கும் நூல் குறித்து பி.பி.சியின் சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் இலங்கையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராக பணிபுரிந்த சமயம் மஹிந்த ராஜபக்ஷ தனது நெருங்கிய நண்பராக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அச்சமயம் இளம் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த மஹிந்த,
இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகத்துடனும், ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணைந்து குரல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அச்சமயம் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு சர்வதேச மன்னிப்புச் சபையுடனும்,
ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணைந்து இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாக்க முனைப்புடன் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அந்நிலைமை முற்றிலும் மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகின்றமை மற்றும் தாக்கப்படுகின்றமை குறித்த செய்திகளைக் கேட்டு தான் பெரிதும் அச்சமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் சிம்பாப்வேயை விட மோசமானதாக இல்லை என தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,
ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் இந்தளவு மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிச்சட் டீ சொய்சா பிரேமதாசவின் ஆட்சிக்காலத்திலேயே கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், ஆனால் அச்சமயம் அவரது நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்த பெரும்பாலான ஊடகவியலாளர்களுக்கு எதிராக பாரியளவு தாக்குதல்கள் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேமதாச பிரதமராக இருந்த சமயம் அவர் தனது நெருங்கிய நண்பராக இருந்ததாகவும், பின்னர் அவர் ஜனாதிபதியானதும் அந்நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் க்ளேட்ஸ்டோன் பி.பி.சி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் அரசுக்கு எதிராக ஜே.வி.பியினர் ஆயுதம் ஏந்திய சமயம், இரு சாராரினாலும் சுமார் 60,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள், காணமால்போதல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட சகலவிதமான மனித உரிமை மீறல்களையும் தான் கண்டித்ததாகவும் க்ளேட்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment