Tuesday, 15 July 2008

பொலிஸ் பதிவுகளுடன் தங்கியிருந்த இளைஞர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்தல்

சகல பொலிஸ் பதிவுகளுடனும் தெகிவளையில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் வெள்ளைவானில் இராணுவச் சீருடையணிந்த மூவரும்

ஒரு ஊர்காவற்படை வீரரும் சிவில் உடையில் வந்த நால்வரும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்திச் சென்றதாக அவரது உறவினர்கள் தெகிவளைப் பொலிஸ் நிலையத்திலும் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடமும் புகார் செய்துள்ளனர்.

2 ஆம் வட்டாரம் அனலைதீவைச் சேர்ந்த குமாரசாமி கிருபாஹரன் (வயது 31) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டதாக அவரது ஒன்றுவிட்ட சகோதரரும் தெகிவளையில் வியாபாரம் செய்பவருமான திருநாவுக்கரசு சசிதரன் புகார் செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வர்த்தக நிலையத்திற்கு 562076 என்ற இலக்கமுடைய வெள்ளை வானில் வந்த இராணுவ சீருடை ஆயுததாரிகளே இக் கடத்தலை மேற்கொண்டதாகவும் ஸ்தாபனத்திற்குள் நுழைந்து அங்கிருந்த சுமார் ஏழு பேரை முழங்காலில் இருத்திவிட்டு கிருபாஹரனை இழுத்துச் சென்று வானில் ஏற்றியதாகவும் சசிதரன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

கிருபாஹரனின் பெற்றோரும் சகோதரரும் 1999 ஆம் ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் இறந்துபோனதாகவும் முள்பட்டதால் ஒரு கண்ணை இழந்த இவர் வடக்கில் வாழமுடியாத சூழலினாலேயே தெகிவளையில் வசிக்கும் ஒன்றுவிட்ட சகோதரனாகிய தன்னிடம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கிருபாஹரனின் பதிவு உட்பட அனைத்து ஆவணங்களையும் கடத்தல்காரர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் எங்கு கடத்திச்செல்லப்பட்டாரென்று அறியமுடியவில்லையென்று சசிதரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதியமைச்சர், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

No comments: