பம்பலப்பிட்டி கடற்பரப்பில் ஏற்பட்ட ஒருவிதமான திடீர் மாற்றத்தினால் கடல் நீர் மேலெழுந்து, சில நிமிடங்கள் வரை மரம்போல் காட்சியளித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துக்குள்ளானதுடன் பிரதேசத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய இந்த அரிதான அதிசயமான சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீர் மேலெழுந்த அருங்காட்சியை பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் பிற்பகல் வேளையில் கண்டுகளித்துள்ளனர்.
சுமார் 5 நிமிடங்கள் வரை நீர் மேலெழுந்தவாறே நின்ற காட்சியை காணமுடிந்ததாக அக்காட்சியை கண்டுகளித்த மக்கள் தெரிவித்தனர்.
கடற்பரப்பில் ஏற்பட்ட சூழற்காற்று காரணமாகவே கடல் நீர் மேலெழுந்துள்ளது. இதனால் சூழலுக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம் டொரொண்டோ வகையான காலநிலை மாற்றத்தினாலேயே கடலில் இவ்வாறான அதிசய மாற்றங்கள் நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்தும் மேகத்தினாலேயே கடல் சூழற்காற்று கடல் நீரை வித்தியாசமான முறையில் மாற்றத்திற்குள்ளாக்குவதுடன் மரத்தைப்போல் மேலழுந்து நிற்கச் செய்யும். இது தொடர்பில் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி டி.எம். தயாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment